`அழகான முகம், உடல் மெலிந்து கறுத்து வந்திருக்கிறார்!’ - தி.மு.க தொண்டர்கள் பேச்சால் ஸ்டாலின் நெகிழ்ச்சி | Stalin election campaign in walajabad

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:11:08 (15/04/2019)

`அழகான முகம், உடல் மெலிந்து கறுத்து வந்திருக்கிறார்!’ - தி.மு.க தொண்டர்கள் பேச்சால் ஸ்டாலின் நெகிழ்ச்சி

``எவ்வளவு அழகான முகம். நமக்காக ஒரு மாதமாகச் சுற்றி உடல் இளைத்துப் போய் கறுத்துவந்திருக்கிறார்’’ என்று தி.மு.க தொண்டர்கள் பேசிக்கொண்டதால் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்தார்.

ஸ்டாலின் பிரசாரம்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அசோகனை ஆதரித்து, வாலாஜாபேட்டையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், ``மத்தியில் மோடி தலைமையில் நடைபெறும் மோசடியான ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார். தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி காலியாகும். தி.மு.க மீது கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை. 

வாலாஜாபேட்டையில் குவிந்த தொண்டர்கள்

பொடா, தடா, மிசாவையே பார்த்திருக்கிறோம். தி.மு.க பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம். தேர்தலில் தி.மு.க பெரிய வெற்றியைப் பெறப்போகிறது. அது, அவர்களின் கண்ணை உறுத்துவதால் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வேகாத வெயிலில் நம் (ஸ்டாலின்) பிள்ளை ஒரு மாதமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். இப்போது, நம்முடைய ஊருக்கு வந்திருக்கிறார். எவ்வளவு அழகான முகம். இளைத்துப் போய் கறுத்துவந்திருக்கிறார் என்று என்னைப் பற்றி தொண்டர்கள் பேசிக்கொள்வதை கேட்கிறேன். ஆசையாக வரவேற்க வந்ததைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார்.