விஷவாயு தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் தொழிலாளர்கள் - திருப்பூர் சோகம் | 4 Assamese labour dead at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:44 (15/04/2019)

விஷவாயு தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் தொழிலாளர்கள் - திருப்பூர் சோகம்

திருப்பூர் அருகே சாய சலவை ஆலையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்குச் சென்ற அஸ்ஸாம் மாநில கூலித் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்ஸாம் தொழிலாளர்கள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் யுனிட்டி வாஷிங் என்ற தனியார் சாய சலவை ஆலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஜெயக்குமார். இந்த நிலையில், இன்றைய தினம் ஆலையின் சாயக் கழிவுநீர் தேக்கி வைத்திருந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு அங்கு பணியாற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். முதலில் இறங்கிய பருக் அகமது என்பவர், உள்ளே சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மயங்கி விழ, உடனே அவரைக் காப்பாற்றுவதற்காக சக தொழிலாளிகள் அன்வர் உசேன், தில்வார் உசேன் மற்றும் அபு ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார்கள். அப்போது அந்த மூவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து தொட்டிக்குள் விழுந்தவர்களை மற்ற ஊழியர்கள் உதவியுடன் மேலே தூக்கிக்கொண்டுவர, அதில் 3 பேர் உயிரிழந்துபோனது தெரிந்திருக்கிறது. மேலும் தில்வார் உசேன் என்பவரை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிரும் பிரிந்தது. அதன்பிறகு உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக அளவு ரசாயனங்கள் அடங்கியுள்ள சாயக்கழிவுத் தொட்டியை எந்தவித பாதுகாப்பு வசதிகளும், இயந்திர உதவியும் இல்லாமல் வெறும் பக்கெட்டுகளைக்கொண்டு தொழிலாளிகளை சுத்தம் செய்யவிட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, சம்பந்தப்பட்ட சாய சலவை ஆலையில் சரியான ஆவணங்களும், முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு நடத்தி வருவதாகவும், ஆலையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.