`விருந்தில் விஷம் கலந்துவிட்டார் மத்திய அமைச்சர்!' - நிதின் கட்கரி பேச்சால் விவசாயிகள் குமுறல் | Farmers opposes minister Nitin gadkari's speech over salem - chennai expressway project

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:37 (15/04/2019)

`விருந்தில் விஷம் கலந்துவிட்டார் மத்திய அமைச்சர்!' - நிதின் கட்கரி பேச்சால் விவசாயிகள் குமுறல்

`எங்களுக்காக உழைத்த, குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் விருந்தளிக்க ஏற்பாடு செய்தோம். விருந்து தயாராகி சாப்பிடும்போது மத்திய அமைச்சர் கூறிய தகவலைக் கேட்டு விருந்தில் விஷம் கலந்ததுபோல ஆனது' என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கருப்புக்கொடி போராட்டம்

`முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கனவுத் திட்டமான 8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்று மத்திய நீர் வழி மற்றும் தரை வழி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சை அடுத்து சேலம் தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 வழிச் சாலைப் பகுதிகளில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டைப் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நீர் வழி மற்றும் தரை வழி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்ட பிரசார மேடையில் மேலே குறிப்பிட்டவாறு மத்திய அமைச்சர் கூறினார். இது 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு பல இடங்களில் கறுப்புக் கொடி போராட்டமும் நடைபெற்றது.

நாராயணன்

இதுகுறித்து பேசிய விவசாயி நாராயணன், ``நிதின் கட்கரியின் பேச்சைக் கேட்டு நாங்கள் நிலைகுலைந்து இருக்கிறோம். எங்களுக்கு அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஆரம்பத்தில் இருந்தே எதிரான செயலில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், பா.ம.க எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. அப்படிப்பட்ட பா.ம.க., அ.தி.மு.கவோடு கூட்டணி சேரும்போது 8 வழிச் சாலையை தடுத்து நிறுத்தவே இந்தக் கூட்டணி என்று கூறியது.

ஆனால், பா.ம.க நிறுவனத் தலைவர் அய்யா ராமதாஸை வைத்துக்கொண்டே நிதின் கட்கரி இப்படி ஒரு தகவலைத் தெரிவித்திருப்பது வேதனையளிப்பதோடு மக்களை முட்டாள் ஆக்குவதுபோல இருக்கிறது. விவசாயிகளாகிய நாங்கள் குழம்பி இருக்கிறோம். நாங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடுகிறோம். யார் என்ன கூறினாலும் எங்க போராட்டம் நீர்த்துப் போகாது'' என்றார்.

விவசாயி சிவகாமி கூறுகையில், ``8 வழிச் சாலை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை விவசாயிகள் அனைவரும் மனநோயாளியாக வாழ்ந்தோம். உயர் நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அதையடுத்து இன்று எங்களுக்காக உழைத்த, குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் விருந்தளிக்க ஏற்பாடு செய்தோம். விருந்து தயாராகி சாப்பிடும்போது மத்திய அமைச்சர் சிவகாமிகூறிய தகவலைக் கேட்டு விருந்தில் விஷம் கலந்ததுபோல ஆனது. சாப்பிடவும் முடியாமல் பரிமாறவும் முடியாமல் தவித்தோம். எங்கள் போராட்டம் நியாயமானது, உண்மையானது எந்த அரசியல் சாயமும் இல்லாதது எங்களை உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.

8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் பேசுகையில், ``பா.ம.க எங்களிடம் உண்மையை மறைக்கிறது. பா.ம.க-வின் கருத்தை ஆளும் அரசாங்கம் ஏற்கவில்லை அல்லது அவர்களின் கருத்தை எங்களிடம் பா.ம.க சொல்லாமல் ஏமாற்றுகிறது. மொத்தத்தில் பா.ம.க இரட்டை வேடம் போடுகிறது. பா.ம.க மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். பா.ம.க எங்களுக்கு நன்மை செய்யாது. எங்களை நம்பிக்கைத் துரோகம் செய்து முட்டாள் ஆக்குகிறது'' என்றார்.

சேலம் பூலாவரி பகுதியில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மோகனசுந்தரம், ``தீர்ப்பைக் கேட்டு நிம்மதி வந்தது. நிதின் கட்கரி பேச்சைக் கேட்டு நிம்மதி இழந்து விட்டோம். ஆளும் பா.ஜ.க., அ.தி.மு.க எங்களுக்கு எதிராகச் செயல்பட்டது. ஆனால் பா.ம.க எங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இரண்டு பேரும் கூட்டணி வைத்துக்கொண்டார்கள்.தற்போது பா.ம.கவை வைத்துக் கொண்டே 8 வழிச் சாலையை நிறைவேற்றுவோம் என்று சொல்லுகிறார்கள். பா.ம.க-வினர் அமைதியாக இருப்பது இரட்டை வேடம் போடுவதாக இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடாமல் பா.ம.க தன் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து 8 வழிச் சாலைக்கு எதிரான அறிக்கை வெளியிட வேண்டும்'' என்றார்.