`மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்!' - குஷ்பு ஆருடம் | Congress spokes person kushboo slams Modi, BJP

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:08:09 (15/04/2019)

`மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்!' - குஷ்பு ஆருடம்

`பா.ஜ.க. ஒரு கட்சி இல்லை, அது மோடியை மட்டுமே நம்பியுள்ளது. 2019 மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும்' என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்தார்.

குஷ்பு

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தத் தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் போர். பதினைந்து லட்சம் ரூபாய் பணத்தை ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்று கூறிய பொய்யை மறைக்கவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி கொண்டு வந்தார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, வேலையில்லா திண்டாட்டம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியவர் பிரதமர் மோடி.

பா.ஜ.க 2014-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத்தான் இப்போதும் வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. ஒரு கட்சி இல்லை, அது மோடியை மட்டுமே நம்பியுள்ளது. 2019 மோடி தோற்றுவிட்டால் பா.ஜ.க. இல்லாமல் ஆகிவிடும். ராகுல் காந்தி தூங்குவது, வயநாடு வருவது, அமேதி தொகுதிக்குச் செல்வது, நடந்தால், நின்றால், முத்தம் கொடுத்தால், அனைத்தையுமே பிரச்னையாக எடுத்துக் கூறுகிறார்கள். 22 லட்சம் காலிப் பணியிடம் மத்திய அரசுத் துறையில் இருக்கிறது. அதை நிரப்ப இந்த ஆட்சி தவறி விட்டது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது. திணிக்கப்பட்ட முதலமைச்சர்.

குஷ்பு

நாட்டில் நடக்கும் தவற்றை சுட்டிக் காட்டினால் தேசவிரோதிகள் போன்று சித்திரிக்கிறார்கள். தமிழகத்தில் நீட் வேண்டாம். ஒரு அனிதாவை தமிழகம் இழந்தது போதும். ராகுல் காந்தி தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டு வரமாட்டோம் என்று கூறுகிறார். காவிரி தண்ணீர் இரண்டு மாநிலங்களுக்கும் வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காவிரி தண்ணீருக்கான பேச்சுவார்த்தை நடக்கும்.

பொள்ளாச்சி, கத்துவா போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமையில் முன் நின்றவர்கள் யார் என்பதைப் பார்த்தால்தான் தெரியும். கர்நாடகாவில் என் மீது கை வைத்தது காங்கிரஸ் கட்சியின் தொண்டன் இல்லை, வழிப்போக்கன். 2004-ல் இருந்து 2014 வரை பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாகக் கொண்டு வந்தது; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தது காங்கிரஸ். தென் மாநிலங்களில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காக தான் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். தென் மாநிலங்கள் வளர்ச்சி பெறக்கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. தென் மாநிலங்களில் போட்டியிடுவதற்கு நரேந்திரமோடிக்குத் தைரியம் உள்ளதா. குறிப்பாகத் தமிழகத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா" என்றார்.