`சின்னத்தம்பி, விநாயகன் இருந்தவரை இப்படி இல்லை!' - வனத் தீயால் கொதிக்கும் கோவை மக்கள் | Forest fire in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (14/04/2019)

கடைசி தொடர்பு:07:56 (15/04/2019)

`சின்னத்தம்பி, விநாயகன் இருந்தவரை இப்படி இல்லை!' - வனத் தீயால் கொதிக்கும் கோவை மக்கள்

கோவையில், விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை இடமாற்றம் செய்ததால்தான், வனத்தீ ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வனத்தீ

கோடை வெயில் தமிழகம் முழுவதும் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.  தமிழக வனப்பகுதிகளில் இந்தாண்டு அதிகளவு தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் தொடர்ந்து தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கோடை வெயில் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் தவறுகள் தான் தீ விபத்துக்குக் காரணம் என்று சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

``வனப்பகுதியில் எங்கெல்லாம் மனிதர்களின் அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ? அங்கெல்லாம் தீ விபத்து ஏற்படும்” என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கோவையில், தடாகம், மருதமலை, வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக வனத்தீ ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் இரவு பகலாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வனத்தீயை, கோவையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி மற்றும் விநாயகன் யானைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர் தடாகம் மக்கள்.

வனத்தீ

மாணிக்கராஜ்இதுகுறித்து தடாகம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் கூறுகையில், ``விநாயகன், சின்னத்தம்பி இருந்தவரை இங்கு தீ விபத்து நடந்ததில்லை. இப்போது, இரண்டு யானைகளும் இல்லை. அந்த யானைகள் எப்போதும் சுற்றித் திரியும் பகுதிகளில் தான் தீ விபத்து நடந்து வருகிறது. இரண்டு யானைகளும் இல்லாததால், சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே, வனப்பகுதியில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லை. தற்போது வனத்தீ ஏற்பட்டால், வனவிலங்குகள் எங்கே செல்லும்?

வனத்துறை உடனடியாக இதுபோன்ற சமூக விரோதிகளின் செயல்களை தடுத்து, வனவிலங்குகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும்” என்றார்.