தூத்துக்குடியில் ஒரே நாளில் தி.மு.க, அ.தி.மு.க., நிர்வாகிகளின் இடங்களில் ரூ.1.15 கோடி பறிமுதல்! | Money seized at DMK, ADMK, executives in one day at thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (15/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (15/04/2019)

தூத்துக்குடியில் ஒரே நாளில் தி.மு.க, அ.தி.மு.க., நிர்வாகிகளின் இடங்களில் ரூ.1.15 கோடி பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் ரூ.1 கோடியே 15 லட்சம் வரையிலான பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலிருந்து அருப்புக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி நேற்று தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில், விளாத்திகுளம் அருகிலுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவரது இருக்கையில் இருந்த துணிப்பையை எடுத்துச் சோதனையிட்டனர். அதில், மேல் பகுதியில்  ஜவுளிகளும், அதன் கீழே பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பார்சலில், கட்டுக் கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதிலிருந்த  ரூ.31 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம்

திருச்செந்தூர் அருகே காயாமொழி மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் கார் முதலில் ஊத்தாங்கரைவிளை ரோட்டில் சென்றது. பின்னர் சிறிது நேரத்தில் பின்னால் வந்த அந்த வாகனம் மெயின்ரோட்டில் செல்ல முயன்றது. இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர், அந்தக் காரை ஜீப்பில் பின்தொடர்ந்து சென்றனர். மத்திமான்விளை பகுதியில் அந்தக் காரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.40 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் உடன்குடி கொட்டங்காட்டைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வசீகரனுக்குச் சொந்தமான பணம் எனச் சொல்லப்படுகிறது.

இதேபோல, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பூர் என்ற கிராமத்தில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஸ்ரீவை ராஜகோபால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மண்ணுக்கு அடியில்  68,50,100  ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம்

இதேபோல, உருளைக்குடி ஊராட்சிக்குட்பட்ட பீக்கிலிபட்டி கிராமம் அருகே கலைமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தின் அருகில் மண்ணில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க