``கலைஞனாக சாக மறுத்து, உங்கள் தொண்டனாக வாழ நினைக்கிறேன்!” குமரியில் உருகிய கமல்ஹாசன் | kamal campaign in kumari

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (15/04/2019)

கடைசி தொடர்பு:08:25 (15/04/2019)

``கலைஞனாக சாக மறுத்து, உங்கள் தொண்டனாக வாழ நினைக்கிறேன்!” குமரியில் உருகிய கமல்ஹாசன்

``ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்று மீண்டும், மீண்டும் போராட்டம் நடக்கும். அதற்கு நான் தலைமை வகிக்கிறேனோ இல்லையோ ஆனால், நான் அங்கு இருப்பேன்" என நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன்


நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ``பல ஊர்கள் சென்று வந்ததால் இந்த ஊருக்குத் தாமதமாக வந்திருக்கிறேன். இந்த மேடைக்கு மட்டும் அல்ல அரசியலுக்கும் தாமதமாக வந்திருக்கிறேன். கன்னியாகுமரி வேட்பாளர் எபினேசரை ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதலே எனக்குத் தெரியும். இங்கும் போராட்டம் தேவைப்படுகிறது. அவரை டெல்லிக்கு அனுப்ப நான் ஏற்பாடு மட்டும் செய்திருக்கிறேன். நீங்கள்தான் அதை செய்ய வேண்டும். ஒரு மாற்றத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது இந்தக் கூட்டம். இது காசுகொடுத்துக் கூட்டிய கூட்டம் அல்ல. தமிழகத்தில் நேர்மையாளர்கள் பலரும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கு பேருதாரணம் இந்தக் கூட்டம். இவர்கள் மாற்றத்தின் தலைவர்கள் நான் அவர்களின் தொண்டன்.

பொதுக்கூட்டம்


மக்களை நோக்கி துப்பாக்கியைத் திருப்பும் தைரியம் இவர்களுக்கு வந்தது என்றால் அதற்கு நாம் மெத்தனமாக இருந்ததுதான் காரணம். கனிம வளம், மண், மக்களை சூறையாடிவிட்டு பணத்தை எங்கே கொண்டுபோவார்கள். ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது இந்தப் பணம் இவர்களுக்குப் பயன்படாது என்பதை நாம் பார்த்துவிட்டோம். வெறும் ஒரு கலைஞனாக சாக மறுக்கிறேன். உங்கள் தொண்டனாக வாழ நினைக்கிறேன். மத்திய மந்திரி ஒருவர் எட்டுவழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்கிறார். கோர்ட்டு மறுத்தாலும் மக்களிடம் பேசி, அதிக விலை கொடுத்தாவது கொண்டுவந்தே தீருவோம் என்கிறார். யாருக்காக சாலை கொண்டுவருகிறீர்கள், யாரை யாரிடம் விலை பேசுகிறீர்கள்.

ஜாலியன் வாலாபாக்கில் மக்களை நோக்கிச் சுட்டவன் விரோதி, இங்கு ஆளவந்தவன். தூத்துக்குடியில் நம்மைச் சுட்டது நாம் அமைத்த அரசு. இனி நாம் மெத்தனமாக இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு சோற்றுப்பதம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்று மீண்டும், மீண்டும் போராட்டம் நடக்கும். அதற்கு நான் தலைமை வகிக்கிறேனோ இல்லையோ ஆனால், நான் அங்கு இருப்பேன். வேட்பாளர்கள் முகம் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என்பதால் என் முகத்தையும் முகவரியையும் நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். பணி செய்யாவிட்டால் பதவி விலகுவதாக சத்தியம் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். அதை நான் செயல்படுத்துவேன். எதிர்க்கட்சியினர் உடனே வந்து சொல்வார் இவரைப் பிடிக்கவில்லை என்று. ஆதாரபூர்வமாக நீங்கள் புகார் கொடுத்தால் இந்த ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்படும். டாஸ்மாக் மழையில் நனைந்தவர்கள் இங்கு நிற்கிறார்கள். காலையில் இவர்கள் உணர்ந்து என் பேச்சைக் கேட்டு தெரிந்துகொள்வார்கள். இந்த டாஸ்மாக் கூட்டத்தைக் குறைக்க தமிழகத்தால் முடியும். டாஸ்மாக் வீரர்கள் ஓரம்கட்டப்படுவார்கள். ஒதுக்கிவைக்கும் வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். பணமும், பானமும் நாம் விநியோகிப்பது இல்லை.

கமல் கூட்டம்

மேற்கு கடற்கரையை எப்படி வளர்த்தோமோ அதுபோல கிழக்கு கடற்கரையையும் மாற்ற வேண்டும். கார் தொழிற்சாலைகள் போன்ற மாசு செய்யாத ஆலைகளை அமைத்து வேலைகளை வழங்க முடியும். 50 லட்சம் வேலையை உருவாக்கித் தருவோம் என நாம் சொன்னால் மற்ற கட்சிகள் கொக்கரிக்கிறார்கள். கலை உலகினர் ஐபிஎல் கிரிக்கெட்டை நிறுத்துவதற்காக போனார்கள். நான் சொன்னேன் சற்றே தள்ளி கோட்டையில் 234 பேர் விளையாடுகிறார்கள், அவர்களின் விளையாட்டை நிறுத்துங்கள் என்றேன். இன்றும் என் நிலைப்பாடு அதுதான். நமது வேட்பாளர்கள் டெல்லிக்குச் சென்று இங்கே நல்லரசு அமைய அஸ்திவாரம் இடுவார்கள். தமிழகம் பெரும் வெற்றியை நாட்டுக்கு காட்டும்போது அதில் நீங்கள் பங்காளிகளாக மாற வேண்டும். இருப்பதில் பெரிய கூட்டணி இதுதான். இதை வெல்ல எந்தக் கூட்டணியும் துணியாது, துணிந்தாலும் வெல்லாது. தமிழக மக்கள் கொடுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் என்னை இப்படி பேச வைக்கிறது. அவர்கள் குரலாக மாறி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் இடத்திலும் மேடையிட்ட பிறகு மாற்றச் சொல்வார்கள். ஊருக்குள் வரக்கூடாது, வந்தாலும் பேசக்கூடாது என்பார்கள். இது மக்களின் கட்சி, மக்களின் அரசியல், மக்களின் ஆட்சியாக மாறும். இங்கு பாதுகாப்பு பணி செய்யும் காவல்துறைக்கு நன்றி சொல்கிறேன். திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலரை ஏவல்துறையாக மாற்றியது இந்த அரசு. எனவே, இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும்" என்றார்.