``ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சம்பந்தப்பட்ட கழகங்கள் அகற்றப்பட வேண்டும்!” - பிரசாரத்தில் கமல்ஹாசன்! | The Parties involved in the Sterlite Factory problem should be removed says kamal hasan

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (15/04/2019)

கடைசி தொடர்பு:09:15 (15/04/2019)

``ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சம்பந்தப்பட்ட கழகங்கள் அகற்றப்பட வேண்டும்!” - பிரசாரத்தில் கமல்ஹாசன்!

``ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது ஒரு கழகம், விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்தது மற்றொரு கழகம். இந்த ஆலைப் பிரச்னையில் சம்பந்தப்பட்டுள்ள கழகங்களை அப்புறப்படுத்த வேண்டும்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பொன்குமரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நடராஜன் ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் பேசிய அவர், ``தூத்துக்குடி என்றதும் கொற்கை துறைமுகம்தான் நினைவுக்கு வர வேண்டும். ஆனால், அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுதான் நினைவுக்கு வருகிறது. தற்போது நாட்டை பிளவுபடுத்தும் அசுத்தமான சக்தி உள்ளே நுழைந்துள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும்.

கமல்

தூத்துக்குடியில் அரசு, காவல்துறையை ஏவல்துறையாக நடத்திக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலின் மூலமாக அரசை மட்டுமல்ல நம் காவல்துறையையும் காப்பாற்றியாக வேண்டும். நான் இந்தியாவில் தமிழகத்திலேயே தொழிற்சாலைகளே வேண்டாம் என பரப்புரை மேற்கொள்வேன் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அப்படியல்ல. இந்தியாவில் தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக மாற்றுவதே எனது எண்ணம். தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையே வேண்டாம் எனச் சொல்லவில்லை. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்றும் இங்கு யாரும் சொல்லவில்லை. அதன் மாசு, மக்களைத் தொடாதவாறு பாதுகாத்திருக்க வேண்டும்.

தமிழனுக்கு பணிவும் உண்டு, வீரமும் உண்டு‌. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் நம்முடைய பணிவை வைத்து நம்மை அடிமையாக்கப் பார்க்கிறார்கள். இவர்களை தமிழகத்துக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் சுடச் சொன்னதும் தமிழன்தான்; சுட்டதும் தமிழன்தான். நான் 20 வருடத்துக்கு முன்பு அரசியலுக்கு வந்திருந்தால் தூத்துக்குடியில் இப்படி அநீதி நடந்திருக்குமா. இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்த கழகம், விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்த கழகம் என, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சம்பந்தப்பட்டுள்ள கழகங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

கமல்ஹாசன்

தமிழகத்தின் சரித்திரத்தைப் புரட்டிப் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இங்கு நிறைய வளர்ச்சிகளும் வர வேண்டும். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை கிராமங்கள் எல்லாம் தொழில் வணிகத்தில் சிறக்க வேண்டும். கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்தில் அந்நிய கடல் வாணிபம் நிகழ்வதைப்போல் தூத்துக்குடியிலும் துறைமுகம் வளர்ச்சி அடைய வேண்டும். அரசியல் மாண்பை மீட்டெடுக்க பிறந்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம். நான் தேர்தலில் போட்டியிடாதது பற்றி சிலர் கேள்வி எழுப்புகின்றனர் தமிழகத்தின் 40 தொகுதியில் நிற்பவர்களும் என்னுடைய பிரதிபலிப்புதான்.

பொதுக்கூட்டம்

இவர்கள் உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதன்பின் இவர்கள் செய்யும் நன்மையின் மூலமாக நீங்கள் என்னைக் காணலாம். இரவு 10 மணிக்கு மேல் நடந்து செல்வோர் கையில் டார்ச் லைட்டை எடுத்துச் செல்லக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தால் வழங்கப்பட்டிருக்கும் டார்ச்லைட் சின்னம் மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது. நமக்கான விளம்பரத்தை நாம் தேட வேண்டாம். நமது எதிரிகள் நமக்கு தேடித் தருகிறார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க