உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் - ஓர் எழுத்தில் முதலிடத்தை இழந்த சென்னை சென்ட்ரல் | worlds longest railway station name

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (15/04/2019)

கடைசி தொடர்பு:09:57 (15/04/2019)

உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் - ஓர் எழுத்தில் முதலிடத்தை இழந்த சென்னை சென்ட்ரல்

சென்னை சென்ட்ரல்

அண்மையில்   `புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் ஒரு எழுத்தில் உலகின் நீளமான பெயர்க் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை இழந்துள்ளது. 

1873-ம் ஆண்டு முதல் சென்னையின் அடையாளமாகிப்போன இந்தக் கட்டடம், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் `மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற பெயரிலிருந்து `சென்னை சென்ட்ரல்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

எம்.ஜி.ஆர்

மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, 'தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்' பெயர் வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் குறித்து வெளியிடப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு,  `புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர்

ஆங்கிலத்தில், இந்த ரயில்நிலையத்தின் பெயர் 57 எழுத்துகளைக் கொண்டுள்ளது. ஆனால், வேல்ஸ் நாட்டில் உள்ள  Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch (தவறுதலாக டைப் செய்யப்படவில்லை. உண்மையில் அந்த ரயில் நிலையத்தின் பெயர் இதுதான்) ரயில் நிலையம் 58 எழுத்துகளைக் கொண்ட ரயில் நிலையமாகும். அதனால் உலகின்  நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது.  புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்துக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்துள்ளது. 

வேல்ஸ்

இந்தியாவில் இந்த ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூரில் உள்ள,  `க்ரண்டிவிரா சங்கொல்லி ரயன்ன பெங்களூரு சிட்டி’ (Krantivira Sangolli Rayanna Bengaluru City ) ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பெயரும் 2015 -ம் ஆண்டு இந்தப் பெயருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மூன்றாம் இடத்தில் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் (Chattrapati Shivaji Maharaj Terminus) 33 எழுத்துகளுடன் உள்ளது.