``மக்களை பிளவுபடுத்தி கலவரங்கள் செய்ததுதான் மோடி அரசின் சாதனை!" - பிரகாஷ் காரத் | Praksh karath campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (15/04/2019)

கடைசி தொடர்பு:10:14 (15/04/2019)

``மக்களை பிளவுபடுத்தி கலவரங்கள் செய்ததுதான் மோடி அரசின் சாதனை!" - பிரகாஷ் காரத்

`மக்களைப் பிளவுபடுத்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தியதைத் தவிர, மோடி அரசு வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோவையில் பேசியுள்ளார்.

கோவையில் பிரகாஷ் காரத் பிரசாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் போட்டியிடும்  சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவை சிங்காநல்லூரில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், ``வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் முக்கியமான தேர்தல். அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஓரணியில் திரண்டு, மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கோவையில் பிரகாஷ்காரத் பிரசாரம்

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டி புதைக்க ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க முயற்சி செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக, மனு ஸ்மிருதியை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. பசுவின் பெயரால் 47 சிறுபான்மையின, தலித் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை ஏற்பட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்தி மதக்கலவரங்களை ஏற்படுத்தியதைத் தவிர, மோடி அரசு வேறெந்த சாதனையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பா.ஜ.க நிறைவேற்றவில்லை. பா.ஜ.க-வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யினால் சிறு, குறு, நடுத்தர தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்கிறது பா.ஜ.க. ஆண்டுக்கு 6,000 ஒரு நாளைக்கு 17 ரூபாய்க்கும் குறைவான அற்ப தொகை. அ.தி.மு.க பா.ஜ.க-விடம் சரணடைந்துவிட்டது. பா.ஜ.க-வின் அடிமையாக அ.தி.மு.க இருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க