`தூங்கும் வரை காத்திருந்தார்!'- நள்ளிரவில் கணவரின் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற மனைவி | Wife killed drunken husband

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:11:27 (15/04/2019)

`தூங்கும் வரை காத்திருந்தார்!'- நள்ளிரவில் கணவரின் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை அருகே மது குடித்துவிட்டு வந்து போதையில் அடித்துத் துன்புறுத்திய கணவனைத் தூங்கும்போது தலையில் பாறாங்கல்லைப் போட்டு, மனைவியே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தேராவூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் (35) கூலித்தொழிலாளி. இவரின் மனைவி கோமதி (30). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான குமார் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் தான், சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து, உதைத்து தகராறில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மனைவியுடன் சண்டையில் ஈடுபட்ட குமார், தன் அறைக்குத் தூங்கச் சென்றுவிட்டார். ஆத்திரம் தீராத கோமதி கணவர் தூங்கும் வரை காத்திருந்து, நள்ளிரவில் அயர்ந்து தூங்கிய வேளையில் பாறாங்கல்லை எடுத்து வந்து கணவர் தலையில் போட்டார். தலையில் ஓங்கி கல்லைப்போட்டதால், தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குமார் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கோமதியைக் கைது செய்த காவல்துறை தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் தலையில் மனைவி கல்லைப்போட்டுக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.