`மோடியின் திட்டம், ஆர்.எஸ்.எஸ்ஸின் குறி, எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்!'- போட்டுடைத்த டி.ராஜா | d.raja campaign in covai

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:12:00 (15/04/2019)

`மோடியின் திட்டம், ஆர்.எஸ்.எஸ்ஸின் குறி, எடப்பாடி பழனிசாமியின் எண்ணம்!'- போட்டுடைத்த டி.ராஜா

கோவையில் டி ராஜா பிரசாரம்


``மோடி அரசின் நோக்கமே இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு சனாதனத்தை அடிப்படையாகக்கொண்ட மனுதர்மத்தை அடிப்படையாக கொண்ட சட்டத்தைக் கொண்டு வருவதற்காகத்தான். அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு இந்தியா மதவாத நாடாக மாற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா கூறியுள்ளார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் சி.பி.எம்.மைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``தமிழ் மக்களுக்கு இனிதான் நல்லநாள். 2019-ல் நடைபெறும் தேர்தல் சோதனையான காலத்தில் நடைபெறும் தேர்தல். ஜனநாயகம் இருக்குமா, அழிந்து போகுமா என்ற அச்சம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க அரசியல் கட்சி என்றாலும் அதை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ்.

மோடி

ஆர்.எஸ்.எஸ் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், அனைவரும் அனைத்தும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதை ஏற்றுக்கொண்டதில்லை. மதவெறி அரசியல் ஆட்சியைக் கைப்பற்றினால் ஜனநாயகத்தைப் பார்க்க முடியாது. மோடி அரசின் நோக்கமே இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தை கொண்டு வருவதற்காகத்தான். அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு இந்தியா மதவாத நாடாக மாற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மதவாத அரசைப்போல நடந்துகொள்கின்றனர்.

இந்து ராஷ்டிரா என்பது இவர்கள் பேசுவது உண்மையாகிவிட்டால் அதைவிடப் பேரிடர் எதுவும் இருக்க முடியாது எனச் சொன்னவர் அம்பேத்கர். இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக, மதச்சார்பற்ற குடியரசாக திகழ வேண்டும் என வலியுறுத்தியவர் அம்பேத்கர். அரசியல் சட்டத்தை உடைத்துவிட்டால் இந்தியாவை மதவெறி நாடாக மாற்றிவிடலாம் என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. என்ன உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை நிர்ணயித்து பா.ஜ.க செயல்படுகிறது. உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா இருந்து வருகிறது. பா.ஜ.க-வின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது?

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

பிரதமர் குறித்து கேள்வி கேட்டால் தேசவிரோதிகள், நக்சலைட்டுகள், அர்பன் நக்சலைட்டுகள் என்று சொல்கின்றனர். ஒரு சதவிகித செல்வந்தர்கள் 53 சதவிகித சொத்துகளை வைத்திருக்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக இந்தப் பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கிறது. பா.ஜ.க இந்துக்களுக்கு ஆதரவான கட்சியா? இந்து மதம் எங்கும் யாரையும் கொல்லச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை. இந்து என்ற பெயரில் மதவெறியைத் தூண்டிவிடும் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் யாருமில்லாமல் மோடி,  ரஃபேல் பேரத்தை நேரடியாக நடத்திமுடித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூர் உட்பட நாடு முழுவதும் சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளின் கையாளாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்தியில் இருக்கின்ற மோடி ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும். அதேபோல, ஜெயலலிதா பின்பற்றிய கொள்கைகளை எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருப்பவர்களும் பின்பற்றவில்லை. ஜெயலலிதா எதிர்த்த  நீட், ஸ்டெர்லைட், மீத்தேன் போன்ற திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மோடியின் காலில் விழுந்து கிடக்கும் எடுபிடி அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது. இடைதேர்தல்களில் அ.தி.மு.க அடையும் தோல்வி எடப்பாடி அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும். தமிழ் மாநிலத்துக்கும், தமிழ் மக்களுக்குத் துரோகம் விளைவித்த எடப்பாடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க