`கட்டுக் கட்டாக பணம்... இரவில் உலா வரும் வெள்ளை ஆம்னி!'- திருவாரூரில் `ஆபரேஷன் ஆயிரம்' | ADMK in money supply in thiruvarur constituency

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (15/04/2019)

கடைசி தொடர்பு:12:25 (15/04/2019)

`கட்டுக் கட்டாக பணம்... இரவில் உலா வரும் வெள்ளை ஆம்னி!'- திருவாரூரில் `ஆபரேஷன் ஆயிரம்'

சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான அதிரடி ஆபரேஷனை அ.தி.மு.க.-வினர் நடத்தினார்கள். வெள்ளை ஆம்னியில் கட்டுக் கட்டாக பணத்துடன் டெல்டா மாவட்ட அமைச்சரின் மைத்துனர் உலா வந்ததாக வருவாய்த் துறை அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

பணம்

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ``நேற்று இரவு திருவாரூர்ல பல இடங்கள்ல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கு. வெள்ளை ஆம்னியில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு போனாங்க. வழக்கமாக ஒன்றியச் செயலாளர்கள் மூலமாகதான் ஊராட்சி மற்றும் நகர கிளைகளுக்குப் பணத்தைக் கொண்டு போயி, அங்குள்ள நிர்வாகிகள் மூலமாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பாங்க. ஆனால், இந்த முறை டெல்டா மாவட்ட அமைச்சரின் மைத்துனர் வெள்ளை கலர் ஆம்னியில் பணத்தைக் கொண்டு போயி, ஊராட்சி மற்றும் நகர கிளை நிர்வாகிகளோட வீட்டுல இறக்கிட்டார். கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் கிராமத்துல உள்ள அ.தி.மு.க ஊராட்சிக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் வீட்டில் 19 லட்சம் ரூபாய் பணம் இறங்கியது.

இந்தப் பகுதிகள்ல ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தாங்க. இந்தத் தகவல் தெரிஞ்சு பறக்கும் படை அதிகாரிகள் போனாங்க. ஆனால், வழக்கு பதிவு செய்ய காவல்துறை, அதிகாரிகள் ஒத்துழைக்கலை. பூங்காவூர்ல அய்யப்பன் என்ற அ.தி.மு.க பிரமுகர் வீட்ல 5 லட்சம் ரூபாய் பணம் இறங்கியிருக்கு. திருக்கண்ணமங்கை ஊராட்சியில் சேகர் என்ற அ.தி.மு.க பிரமுகர் மஞ்சள் பையில வச்சி பணம் கொடுத்திருக்கார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்க போனாங்க.. ஆனால், வழக்கு பதிவு செய்யலை. அரசவணங்காடு, ஆயிக்குடி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகள்ல அ.தி.மு.க பிரமுகர்கள் வீட்ல இருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதுக்கு `ஆபரேஷன் ஆயிரம்'னு பேர் வச்சிருக்காங்க. தி.மு.க.காரங்களும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடிவெடுத்திருக்காங்க. ஆனால், அந்தந்த பகுதிகளுக்குப் பணத்தைக் கொண்டு போக முடியாத அளவுக்கு காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருக்காங்க” என தெரிவித்தார்.

அ.தி.மு.க-வினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, முன்னாள் அமைச்சரும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க பிரமுகருமான ஜீவானந்தத்திடம் விளக்கம் கேட்டபோது, ``இது அனைத்துமே தவறான தகவல். கொரடாச்சேரி எண்கண் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உட்பட  இன்னும் சில அ.தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் பணம் இறக்கி வைக்கப்பட்டதாக சொல்வதும் அமைச்சரின் உறவினர் வெள்ளை ஆம்னியில் பணம் கொண்டு போனதாக சொல்வதும் பொய்யான தகவல்” என தெரிவித்தார்.