`கமல் தைரியமாகக் கூறியிருக்கிறார்; உங்களால் கூற முடியுமா?' - கட்சித் தலைவர்களுக்கு ஸ்ரீப்ரியா கேள்வி | actress sripriya says current tamil nadu election situation and campaign work

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (15/04/2019)

கடைசி தொடர்பு:13:10 (15/04/2019)

`கமல் தைரியமாகக் கூறியிருக்கிறார்; உங்களால் கூற முடியுமா?' - கட்சித் தலைவர்களுக்கு ஸ்ரீப்ரியா கேள்வி

ஶ்ரீப்ரியா

நாளையுடன் தமிழகத்தில் பிரசாரம் ஓய்கிறது. அனைத்துக்கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்காகப் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அக்கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினரான நடிகை ஸ்ரீப்ரியா, தற்போதைய தேர்தல் சூழல்கள் குறித்து விரிவாகப் பேசினார். 

``பிரசார களத்தில் மக்களின் நிலையைப் பார்த்தபோது உங்களுக்குத் தோன்றிய விஷயம்..." 

``துர்நாற்றம், கழிப்பிட வசதி இல்லாத நிலை, குளிக்கவும் பாதுகாப்பற்ற நிலை, குப்பைகளுக்கு நடுவே வாழும் குடிசை வாழ்க்கை, தண்ணீருக்காகப் பல மணிநேரம் அலைவது என நிறைய மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழ்கின்றனர். இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களிடம் தேர்தல் நேரத்தில் ஆசை வார்த்தைகளைக்கூறி, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை ஆண்ட, ஆளுகின்ற கட்சியினர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இப்படி, வறுமையைப் பயன்படுத்தி தான் வாழ்ந்தால்போதும் என நினைப்பதைவிடப் பெரிய கேவலம் எதுவுமில்லை. அப்படித்தான் இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் செய்திருக்கிறார்கள். வசதியுடன் இருப்பவர், இன்னும் வசதி வேண்டும்; எதிர்கால தலைமுறையினருக்கும் சேர்த்து சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் அதிகம். அவர்களுக்கு மத்தியில், அன்றாட வாழ்க்கைத் தேவைக்காகப் போராடும் ஏழை மக்கள்தான் தமிழகத்திலும் இந்தியாவிலும் அதிகம் உள்ளனர். இந்த நிலை, சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அப்படியே நீடிக்கிறது. இப்படி ஏழை மக்களைத் தொடர்ந்து ஏழைகளாகவே ஆட்சி செய்தவர்கள் வைத்திருக்கிறார்கள்.  

உதாரணத்துக்கு, ஒரு விஷயம் சொல்கிறேன். சமீபத்தில் திருவாரூரில் பிரசாரம் செய்தேன். அங்கு மக்கள் வசிப்பிடம், குளம், குட்டைகள் எல்லாவற்றிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க என இரு கட்சியினர்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளனர். இந்த இரு கட்சியுமே, மக்களின் முன்னேற்றத்துக்குப் பெரிய மாற்றங்களை உண்டாக்கவில்லை. இவற்றையெல்லாம் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஒருவர் செய்த குற்றத்தை மன்னித்துவிடலாம். ஆனால், அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எனவே, மக்கள் விலைமதிப்பற்ற வாக்குக்குப் பணம் பெறாமல், சரியான கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நிச்சயம் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். அதைப் பெற்றோர்களிடம் சொல்லி, மாற்றத்துக்கான வழிகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்குத்தான் அதிகம் உள்ளது."

ஶ்ரீப்ரியா

``மக்கள் உங்களிடம் பிரதானமாகக் கூறிய விஷயம் என்ன?" 

`` 'எங்கள் தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி எதுவுமே செய்யவில்லை. வெற்றி பெற்ற பிறகு, ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் இப்போது ஓட்டு கேட்க மட்டுமே வருகிறார்' எனப் பெரும்பாலான மக்கள் புலம்புகிறார்கள். வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி, அடிக்கடி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில், உடனுக்குடன் மக்கள் அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும். அப்படியும் அவர் எதுவும் செய்யவில்லையென்றால், அவர் கட்சித் தலைமை வரை புகார் அளிக்கலாம்; போராடலாம். `எங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்று, மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், அவரை உடனே தகுதி நீக்கம் செய்வேன்' எனக் கமல்ஹாசன் தைரியமாகக் கூறியிருக்கிறார். இப்படி எத்தனை கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மக்களைச் சந்திக்கிற மற்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சியினர் நாங்கள் இல்லை. சினிமா மற்றும் அரசியல் இரண்டுமே மக்களுடன் பிணைப்புடன் உள்ள துறைகள்தாம். அதனால், சினிமா நடிப்பால் ஏற்கெனவே மக்களின் அன்பைப் பெற்றிருக்கிறோம். தற்போது அரசியல்வாதிகளாகவும் மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை முழுமையாகக் காப்பாற்றுவோம்."

``வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுக்கப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"  

`` `திருவாரூரில் எங்கள் கட்சித் தலைவர் பேசும் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேச்சைக் கேளுங்கள்' என வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்தோம். அதை ஏற்று மக்களும், திரளாக எங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இது தானா சேர்ந்த கூட்டமே தவிர, காசு கொடுத்து சேர்த்தக் கூட்டம் இல்லை. `ஓட்டுக்குப் பணம் வாங்காதீர். உங்கள் ஓட்டை பணத்துக்கு விற்காதீர்கள்' என மக்களிடம் எங்கள் கட்சியினர் தைரியமாகக் கூறுகிறோம். அதற்கான தகுதி எங்களுக்கு இருக்கிறது. வாக்குக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதும் ஒரு வகையிலான ஊழல்தான். எங்கள் கட்சியின் முக்கிய நோக்கமே, ஊழலை ஒழிப்பதுதான். இப்படி மற்ற கட்சியினரால் தைரியமாகச் சொல்ல முடியுமா. அதற்குத்தான் பிற கட்சிகளுக்குத் தகுதி இருக்கிறதா?"

ஶ்ரீப்ரியா

``உங்கள் கட்சியை பா.ஜ.க-வின் `பி டீம்' எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து..."

``எங்கள் தலைவர் கமல்ஹாசன் இதற்கான பதிலை ஏற்கெனவே கூறிவிட்டார். நாங்கள் எந்தக் கட்சியின் டீமும் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனச் சிறிய கூட்டமாகத் தொடங்கி, இன்று பெரிய கூட்டமாக வளர்ந்திருக்கும் டீம். நாங்கள் தனிப்பட்ட டீம்; மக்களுக்கான டீம். எங்கள் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் என் இயற்பெயரான அலமேலு என இரு பெயர்களுக்கான அர்த்தமும் தாமரை. நாங்கள் இருவரும் பிறந்த பிறகுதான், பா.ஜ.கட்சி தொடங்கப்பட்டது. அப்போது எங்களையும், எங்கள் பெயர்களையும் இன்ஸ்பிரேஷனாக கருதி, பா.ஜ.க-வின் சின்னமாகத் தாமரையைத் தேர்வு செய்தார்கள் எனச் சொல்ல முடியுமா? அரசியல் கட்சிகள், கொஞ்சமாவது புத்திசாலித்தனமாகக் குற்றச்சாட்டை முன்வைப்பது நல்லது." 

``இந்தத் தேர்தலில் நீங்கள் ஏன் வேட்பாளராகப் போட்டியிடவில்லை?"

``தமிழகம் முழுக்க, நான் மக்களைச் சந்திக்க விருப்பப்படுகிறேன். அதனால் மக்களின் எண்ணம் மற்றும் தேவைகளைத் தெரிந்துகொள்ள நினைத்தேன். அதனால், `இம்முறை தமிழகம் முழுக்க பிரசாரம் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்' என எங்கள் தலைவரிடம் நான்தான் வலியுறுத்திக் கேட்டேன். எனக்காக விருப்பமனு கொடுத்த எங்கள் கட்சியினர் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வரும் தேர்தல்களில், எங்கள் கட்சித் தலைவர் முடிவெடுத்தால், நிச்சயம் வேட்பாளராக நிற்பேன்."  

ஶ்ரீப்ரியா

``உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?"

``ஒரு வெற்றி மற்றும் தோல்வியை வைத்து, ஒரு கட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணித்துவிட முடியாது. அரசியல் கட்சியைத் தொடங்கி, ஒன்றரை ஆண்டுக்குள் தைரியமாக தனித்துத் தேர்தலை சந்திக்கிறோம். எங்களுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவோம். ஆண்ட, ஆளுகின்ற, பிளவுபட்ட கட்சிகள் ஒரு வாக்குக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பதாகப் புகார்கள் வெளியாகின்றன. இதுவரை தமிழகத்தில்தான் அதிகளவில் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. அதேசமயம் எங்கள் கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள் என இதுவரை ஒரு புகார் வந்திருக்கிறதா. இதை வைத்தே, எங்கள் நம்பகத்தன்மையை மக்கள் புரிந்துகொள்வார்கள்."