`வீட்டுக்கு வந்தால் போட்டோவை அழித்துவிடுகிறேன்'- காதலனை நம்பிய இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த துயரம் | College girl was blackmailed by his boy friend

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (15/04/2019)

`வீட்டுக்கு வந்தால் போட்டோவை அழித்துவிடுகிறேன்'- காதலனை நம்பிய இன்ஜினீயரிங் மாணவிக்கு நடந்த துயரம்

  இன்ஜினீயரிங் மாணவி


சென்னை மடிப்பாக்கத்தில் இன்ஜினீயரிங் மாணவியை காதலிப்பதுபோல நடித்து புகைப்படங்களை எடுத்துள்ளனர் காதலன் மற்றும் அவரின் நண்பரும். இவர்களின்  சுயரூபம் தெரிந்ததும் மாணவி, துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்துள்ளார். 

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாகப் பழகிய சமயத்தில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டது. 

இதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவி, பள்ளிக்கரணையைச் சேர்ந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஸ்ரீநாத்துடன் பழகியுள்ளார். ஒருநாள் மாணவியை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக ஸ்ரீநாத் கூறியுள்ளார். அதை நம்பிய மாணவியும் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீநாத், கல்லூரிக்குச் செல்லாமல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேகமாக பைக்கில் சென்றுள்ளார். அதுகுறித்து மாணவி கேட்டதற்கு, இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார். 

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் நண்பர்களுடன் பார்ட்டியைக் கொண்டாடியுள்ளனர் ஸ்ரீநாத்தும் மாணவியும். அங்குதான் மாணவியுடன் நெருக்கமாக ஸ்ரீநாத் இருந்துள்ளார். அதை ரகசியமாக ஸ்ரீநாத்தின் நண்பரான வேளச்சேரியைச் சேர்ந்த மாணவர் யோகேஷ் என்பவர், செல்போனில் படம்பிடித்துள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு வந்த மாணவிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில் மாணவியும் ஸ்ரீநாத்தும் சேர்ந்து இருக்கும் போட்டோ அனுப்பப்பட்டுள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, ஸ்ரீநாத்திடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, `அந்தப்படத்தை அழித்துவிடுகிறேன்' என்று ஸ்ரீநாத் கூறியுள்ளார்.  இதையடுத்து மாணவியிடம் செல்போனில் பேசிய ஸ்ரீநாத், `அந்தப் படத்தை அழிக்க வேண்டும் என்றால் நீ என் வீட்டுக்கு வரவேண்டும். வீட்டில் என்னைத் தவிர வேறுயாரும் இல்லை' என்று கூறியுள்ளார். 

வேறுவழியின்றி மாணவியுடம் அங்கு சென்றுள்ளார். அங்கேயும் மாணவியையும் ஸ்ரீநாத்தையும் யோகேஷ் போட்டோ எடுத்துள்ளார். அதன்பிறகு ஸ்ரீநாத்தும் யோகேஷிம் போட்டோவைக் காண்பித்து மாணவியை மிரட்டியுள்ளனர். நிலைமை விபரீதமானதால் மாணவி என்னசெய்வதென்றுத் தெரியாமல் தவித்துள்ளார். இருவரின் மிரட்டலுக்குப் பயந்து கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார் மாணவி. 

மாணவியின் நடவடிக்கைகளைப் பார்த்த பெற்றோர் அவரிடம் விவரத்தைக் கேட்டுள்ளனர். அப்போதுதான் நடந்த விவரங்களை மாணவி கண்ணீர்மல்க கூறியுள்ளார். உடனடியாக தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைச் சந்தித்த மாணவியும் அவரின் பெற்றோரும் அந்தப் புகைப்படங்களைக் காண்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை நடவடிக்கை எடுக்கும்படி மாணவி கண்ணீர்மல்க கூறியுள்ளார். 

இதையடுத்து, பெண் போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஸ்ரீநாத், யோகேஷ் ஆகியோரிடம் விசாரித்தோம். அவர்களின் செல்போன்களிலும் மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கைதான இருவரும் கல்லூரி மாணவர்கள். மேலும் இருவரும் நண்பர்கள்" என்றனர். 

   இன்ஜினீயரிங் மாணவி

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நல்லவேளையாக சம்பந்தப்பட்ட மாணவி, தைரியமாக புகார் கொடுத்ததால் மாணவர்கள் ஸ்ரீநாத், யோகேஷை கைது செய்துவிட்டோம். அவர்களால் வேறு எந்த மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரித்ததில் அப்படியாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. மாணவியும் கைதான மாணவர்களும் சிறுவயதிலிருந்து ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இதனால்தான் மாணவியும் அந்த மாணவர்களை முழுமையாக நம்பியுள்ளார். ஒருகட்டத்தில் மாணவியை காதலிப்பதாக ஸ்ரீநாத் கூறியுள்ளார். அதை முதலில் மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. 

அப்போது ஸ்ரீநாத், நீ என்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால்தான் மாணவியும் ஸ்ரீநாத்துடன் பழகியுள்ளார். ஆனால், அவர்களின் நோக்கம் தவறாகவே இருந்துள்ளது. மாணவியுடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாகவே எடுத்துள்ளனர். அதைவைத்து மிரட்டியபோதுதான் மாணவர்கள் மீது மாணவி புகார் கொடுத்துள்ளார். மாணவியின் இந்த துணிச்சலான செயலால் மற்ற மாணவிகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உண்மையை பெற்றோரிடம் சொல்லுங்கள். அடுத்து அவர்களின் உதவியோடு காவல் நிலையங்களில் புகார் கொடுங்கள்" என்றார். 

இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீநாத், யோகேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக மகளிர் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது மாணவியை மிரட்டவே புகைப்படங்களை எடுத்ததாக மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவியும் மாணவர்களும் வெவ்வேறு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்தாலும் இவர்களுக்குள் பள்ளிப் பருவத்திலிருந்தே நட்பு நீடித்துவந்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தைப்போல இந்த மாணவர்களும் காதல் என்ற போர்வையில் மாணவியை மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மடிப்பாக்கம் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.