`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை! | thamirabharani river belt farmers are requesting water for banana plantation

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (15/04/2019)

`8,000 ஏக்கர் வாழையைக் காப்பாற்ற வழி செய்யுங்கள்’ தாமிரபரணி விவசாயிகளின் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில், போதிய தண்ணீர் கிடைக்காமல் 800 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் கருகும் நிலையில் இருப்பதால், பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்குமாறு தாமிரபரணி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

விவசாயிகள் கோரிக்கை

தாமிரபரணி ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பாசன பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவரான சீனிவாசன் தலைமையிலான விவசாயிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், ‘’ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் அமைந்துள்ள கடைக்கோடிக் குளங்களுக்கும் இன்னும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. 

அதனால், பேய்க்குளம், பொட்டல்குளம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் விளை நிலங்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. விளை நிலத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், மணிமுத்தாறு அணையில் 79.2 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 46 அடி தண்ணீர் இருக்கிறது. அதனால் விவசாயத்துக்காக ஒரு வார காலத்துக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். தற்போது அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகத் தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தின்கீழ் தண்ணீர் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். 

தண்ணீர் தர தாமிரபரணி விவசாயிகள் கோரிக்கை

தற்போது தண்ணீர் திறக்காவிட்டால் பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கருகிவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தின் மூலமாக 12,695 ஏக்கர் தண்ணீர் பாசன வசதி கிடைக்கிறது. தற்போது அந்தப் பகுதியில் 8,000 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருக்கிறது. அவற்றைப் பாதுகாக்க 10 நாள்களுக்குத் தினமும் 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தற்போது 10 நாள்களுக்குத் தண்ணீர் கிடைத்தால் வாழைகளை ஓரளவுக்குக் காப்பாற்றிவிட முடியும். அத்துடன், ஜூன் மாதத்தில் மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பதால், தற்போதைய நிலையைக் கவனத்தில் கொண்டு தண்ணீர் திறக்க வேண்டும். ஏற்கெனவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் சார்பாக ஏப்ரல் 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நாளை (16-ம் தேதி) மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.