``தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி மூன்று உலகசாதனைகளாக மாறியது’’ - சிதம்பரம் சப்-கலெக்டர் பெருமிதம் | election awareness done by sub collector

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:31 (15/04/2019)

``தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி மூன்று உலகசாதனைகளாக மாறியது’’ - சிதம்பரம் சப்-கலெக்டர் பெருமிதம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாகப் பிரசாரத்திற்கு சமமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூறு சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக நேற்று 2019 பெண்கள் இணைந்து கை விரலில் மையிட்டுக் கொண்டது போன்று வடிவமைப்பில் நின்று உலக சாதனை படைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த சிதம்பரம் சப்-கலெக்டர் விஷ்ணு மகாஜன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். 

தேர்தல்

 

``தேர்தலில் மக்களின் வாக்களிப்பு தொடர்பான விழிப்புணர்வைக் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்த்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் ``ஆன்லைன் புக் ஆஃப் ரெக்கார்டு" என்ற உலக சாதனை முயற்சி. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2019 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டர்.சாதனைக்குத் திட்டமிடும் போதே கின்னஸ்,லிம்கா என்று பெரிய அளவில் திட்டமிட்டுதான் களத்தில் இறங்கினோம்.

கையில் தேர்தல் மையுடன் இருக்கும் விரல் வடிவமைப்பை முதலில் மேப் போன்று உருவாக்கிக்கொண்டோம். மாணவிகள் எங்கெங்கு எப்படி நிற்க வேண்டும் என்பதையும் முன்பே திட்டமிட்டிருந்தோம். ஆசிர்யர்கள் துணையுடன் வழிநடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலக சாதனை சாத்தியமானது. இத்துடன் 8017 பேர் ஒன்றாக இணைந்து நாங்கள் வாக்களிப்போம் என வெள்ளை போர்டில் கையொப்பமிட்டு சாதனை படைத்தனர். மூன்றாவதாக 4000 கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து நூறு சதவிகித ஓட்டு என்ற மனித லோகோவையும் உருவாக்கி சாதனை படைத்தனர். தேர்தல் விழிப்புணர்வுக்கான சின்ன முயற்சி... மூன்று உலகசாதனைகளாக மாறியது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. சாதனை நிச்சயம் வாக்களிப்பாக மாறும்"என்கிறார் திட்டவட்டமாக.