``தலைவர் பிரதிபலித்தது மக்களின் மனநிலை!” - விளம்பர வீடியோ குறித்து மநீம செய்தித் தொடர்பாளர் | Kamalhasan election campaign video

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:50 (15/04/2019)

``தலைவர் பிரதிபலித்தது மக்களின் மனநிலை!” - விளம்பர வீடியோ குறித்து மநீம செய்தித் தொடர்பாளர்

 

மநீம

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக சில காணொலிகள் வெளியிட்டார். அது இணையத்தில் வைரலானதுடன், கமல்ஹாசன் எதற்காக கட்சியின் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசுகிறார். அந்தக் காணொலிகள் இயல்பாக இருப்பது போலின்றி நாடகத்தனமாக இருக்கிறது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து மக்கள் மீது மய்யம் செய்தித் தொடர்பாளர் அப்பாஸிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது, ``எங்கள் தலைவர் எப்போதும் நாகரிகம் கடைப்பிடிப்பவர். தனிமனிதத் தாக்குதல் செய்ய விரும்ப மாட்டார். அதனால்தான் எந்தக் கட்சியின் பெயரையோ அக்கட்சியின் தலைவர்களின் பெயரையோ குறிப்பிடாமல் பொதுவாக விமர்சித்தார். அது சேர்ந்தவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கும். மற்றபடி அவருக்கு தயக்கமோ பயமோ கிடையாது. 

அவர் ரிமோட்டை எறிந்து டிவியை உடைப்பது  இன்றைய மக்களின் மனநிலை. அரசியல்வாதிகளின் போலியான தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து `அந்த டிவியை தூக்கிப்போட்டு உடைக்கணும்' எனச் சொல்லும் அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் எங்கள் தலைவர் அவ்வாறு செய்தார். அந்தக் காணொலி மீது இன்று விமர்சனம் வருகிறது என்றால் அதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதுதானே. வெகுஜன மக்கள் எங்களைப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதுபோதும்" என்றார்.