வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு! - கணவருக்காக களத்தில் இறங்கிய ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி | A.Raja's wife Parameswari campaigns for him in ooty

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (15/04/2019)

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு! - கணவருக்காக களத்தில் இறங்கிய ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி

நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும், ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஊட்டியில் அவரின் மனைவி பரமேஸ்வரி தலைமையில் மகளிர் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 


தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக அவரின் மனைவி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா தற்போது அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி தொகுதியில் நாள்தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நீலகிரி தனித் தொகுதியில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக நடிகர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க பேச்சாளர் பழ.கருப்பையா, எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் பிரசாரம் செய்தனர். ஆனால், ஆ.ராசாவுக்கு ஆதரவாக நீலகிரி தொகுதியில் பிரசாரம் செய்ய வருவதாக இருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கீ.வீரமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்ய நீலகிரி தொகுதிக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஊட்டியில் மகளிர் அணி சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைந்திட உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.