அம்மாவைக் கொல்ல லண்டனிலிருந்து வந்த இன்ஜினீயர் மகன்! - அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனைவி கொலையில் திடீர் திருப்பம் | Son came to home to kill his mother

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (15/04/2019)

கடைசி தொடர்பு:15:13 (15/04/2019)

அம்மாவைக் கொல்ல லண்டனிலிருந்து வந்த இன்ஜினீயர் மகன்! - அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனைவி கொலையில் திடீர் திருப்பம்

சென்னை பெசன்ட் நகரில், அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யின் மனைவி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

 கொலை செய்யப்பட்ட ரத்னம்

சென்னை பெசன்ட் நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அ.தி.மு.க -வில் திருச்செங்கோடு தொகுதியின் எம்.பி-யாக இருந்தார். இவரின் மனைவி ரத்தினம் (63). இவர்களுக்கு பிரவீன் என்ற  மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மகள் திருப்பூரில் குடியிருந்துவருகிறார். 

இந்த நிலையில், பூட்டிய வீட்டுக்குள் ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும், சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழவேசம் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரத்தினத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலைகுறித்து போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கணவர் குழந்தைவேலு இறந்தபிறகு தனியாக வாழ்ந்த ரத்தினம், சென்னையிலும் சேலத்திலும் உள்ள வீடுகளில் குடியிருந்துவந்தார். கடந்த 14-ம் தேதி காலையில்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். அன்றைய தினம், இரவு 8 மணியளவில்  வயிறு, இடது காது ஆகிய பகுதிகளில்  கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. சத்தம் போடாமலிருக்க,அவரின் வாய் பிளாஸ்திரியால் ஒட்டப்பட்டிருந்தது. 

அவர் கொலை செய்யப்படுவதற்கு முன், திருப்பூரில் உள்ள தன்னுடைய மகளுக்கு போனில் பேசியுள்ளார். அப்போது, வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரும்படி பிரவீன் தகராறுசெய்வதாகக் கூறியுள்ளார். இதனால், வெளியூரிலிருக்கும் ரத்தினத்தின் மகள், சென்னை துரைப்பாக்கத்தில்  உள்ள உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டுக்கு வந்தபோதுதான் ரத்தவெள்ளத்தில் ரத்தினம் இறந்துகிடந்துள்ளார். தாய் இறந்த தகவலை அவரின் மகன் பிரவீனிடம் தெரிவிக்க உறவினர்கள் முயன்றபோது, அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்குத் தகவல் தெரிவிக்க முடியவில்லை. இதற்கிடையில், ரத்தினத்தின் மகள் கூறும் தகவலின் அடிப்படையில்பார்த்தால், பிரவீன்தான் ரத்தினத்தைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரவீனிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியும்" என்றனர். 

கொலை செய்யப்பட்ட பெண்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``ரத்தினம் கொலை நடந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுதான் ரத்தவெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களோடு ரத்தினம் இறந்துகிடந்தார். சம்பவ இடத்திலிருந்த கைரேகைகளைப் பதிவுசெய்துள்ளோம். வீட்டின் பின்பக்கம் வழியாகக் கொலையாளி தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று கருதுகிறோம். ரத்தினம் இறந்துகிடந்த அறை முழுவதும் ரத்தம் சிதறியுள்ளது. விரைவில் கொலையாளி யைக் கைதுசெய்வோம்" என்றார்.  

இதற்கிடையில், ரத்தினத்தின் மகள் வெளியூரிலிருந்து சென்னை வந்தார். ரத்தினத்தின் சடலத்தைப் பார்த்து அவர் கதறி அழுதார். ரத்தினத்தின் உறவினர்கள் போலீஸாரிடம், ``பிரவீன், லண்டனில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு அங்கேயே குடியுரிமைபெற்று வேலைபார்த்துவருகிறார். திருமணமாகி அவருக்கு குழந்தை உள்ளது. பிரவீனின் மனைவியும் லண்டனில்  பணியாற்றுகிறார். லண்டனில் செட்டிலாகிய பிரவீன், கடந்த மாதம்தான் சென்னை வந்தார். சென்னையில் உள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரும்படி ரத்தினத்திடம் பிரவீன் கேட்டுள்ளார். இந்தச் சமயத்தில்தான் ரத்தினம் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார். பிரவீனும் தலைமறைவாக இருப்பதால், அவர்மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது'' என்று கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிரவீனை போலீஸார் தேடிவருகின்றனர். 

இன்ஜினீயரிங் படித்துவிட்டு லண்டனில் நல்ல வேலையிலிருக்கும் பிரவீன், சொத்துத்தகராறில் அம்மாவைக் கொலை செய்ததாக பரவிவரும் தகவல், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.