61 நாள்கள் தடை! விசைப்படகுகளைச் சீரமைக்க தீவிரம் காட்டும் மீனவர்கள்   | Fishing ban was started in tn

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (15/04/2019)

61 நாள்கள் தடை! விசைப்படகுகளைச் சீரமைக்க தீவிரம் காட்டும் மீனவர்கள்  

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 61 நாள்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, படகுகளை சீரமைக்கும் பணிகளில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட உள்ளனர்.

மீன்பிடி தடையால் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்

தமிழகத்தில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதம் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி, ஜூன் 15-ம் தேதி வரையிலும் 61 நாள்களுக்கு தடைக்காலம் நீடிக்கிறது. இவை, மீன்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய நாள்களாக உள்ளதால், விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில், 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். தடை காரணமாக, மீனவர்கள் தங்களது படகுகளைக் கரைகளிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். அதே நேரத்தில், குறைந்த அளவு தூரத்தில் மீன்பிடிக்கும் நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழில் செய்வார்கள். நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிப்பதால்,  மீன், நண்டு உள்ளிட்டவை சந்தைக்கு குறைந்த அளவே வரும். இதனால், விலை உயர்ந்து விற்பனையாகும். கஜா புயல் தாக்குதலால் பெரும்பாலான விசைப்படகுகள்  சேதமடைந்தன. படகுகளைச் சீரமைக்க மீனவர்கள் தவித்துவந்தனர். இந்த நிலையில், தற்போது தடைக் காலமும் தொடங்கியுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபடத் தயாராகிவருகின்றனர். அதே நேரத்தில், இரண்டு மாதங்கள் வரையிலும் மீன்பிடித் தொழில் இல்லாததால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.