`ஸ்விட்ச் ஆஃப், ஸ்விட்ச் ஆன்!'- ஜெயலலிதா பாணியில் பாரிவேந்தர்; குமுறும் கூட்டணிக் கட்சியினர் | Alliance party cadres dissatisfied over parivendhar

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (15/04/2019)

`ஸ்விட்ச் ஆஃப், ஸ்விட்ச் ஆன்!'- ஜெயலலிதா பாணியில் பாரிவேந்தர்; குமுறும் கூட்டணிக் கட்சியினர்

"ஜ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், ஜெயலலிதா பாணியில் கண்ணாடிக் கூண்டு பிரசாரம் செய்வதோடு, ஒட்டு கேட்க தொகுதிக்குள் வரும்போது பாடிகார்டு மற்றும் பவுன்சர்கள் அழைத்துக்செல்வதால், 'இவர், இப்போதே இப்படி இருக்கிறாரே... வெற்றிபெற்ற பிறகு  எளிதில் சந்திக்க முடியுமா' என்ற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது" என்று குமுறுகின்றனர் கூட்டணிக் கட்சியினர்.

பாரிவேந்தர் பிரசாரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியும், 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்கள்  கொளுத்தும் வெளியிலும் தீவிரமாக வாக்கு சேகரித்துவருகின்றனர். ஆனால், பாரிவேந்தரின் ஒவ்வொரு செயலையும் பார்த்து கொந்தளிக்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர்.

கொளுத்து வெயிலில் பாரிவேந்தர் பிரசாரம்

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளராக, இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க-வுடன் மிகவும் இணக்கமாக இருந்து அவர் மேற்கொண்டுவரும் பிரசாரம் பரபரப்பாகிவருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் பாரிவேந்தர். இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, கேரவன் வேன் பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறையும் ஜெயலலிதா பாணியில் டெம்போ வேனில் கண்ணாடிக் கூண்டில் பாரிவேந்தர் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். குறிப்பிட்ட பாயின்டுகளில் மட்டும் ஜீப்பில் செல்லும் அவர், பல இடங்களில் டெம்போ வேனில் சுவிட்ச் போட்ட உடன் மேலே வரும் கண்ணாடிக்கூண்டில் அமர்ந்தபடி பேசுகிறார். பேசி முடித்தவுடன் ஸ்விட்ச் ஆஃப் செய்தவுடன் கண்ணாடிக்கூண்டு வேனுக்குள் சென்றுவிடும்.

தமிழக அரசியல்வாதிகளில் ஜெயலலிதா மட்டுமே வேனில் கண்ணாடிக்கூண்டில் பேசியவர். அடுத்தபடியாக, பாரிவேந்தரின் கண்ணாடிக் கூண்டு பிரசாரம், அவருக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என பெரம்பலூர் வாக்காளர்களிடம் கேட்டதற்கு, "இந்தத் தொகுதி, கிராமங்கள் அதிகம்கொண்டது. கண்ணாடிக்கூண்டு அவருக்கு கை கொடுக்குமா எனத் தெரியவில்லை" என்கின்றனர்.

பாரிவேந்தர் பிரசாரம்

இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளிடம் பேசினோம். ”தி.மு.க, அ.தி.மு.க என அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீதியில் இறங்கி வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரிவேந்தர் வீதியில் இறங்குவதும் கிடையாது, மக்களிடம் சகஜமாகப் பேசுவதும் கிடையாது. அவர், வண்டியில் நின்றுகொண்டே வாக்கு கேட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். ஐந்து நிமிடம் வெயிலில் நின்றால்,  10 நிமிடம் ஏசி-யில் உட்கார்ந்திருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி மக்கள் நம்புவார்கள். குக்கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு வரும்போது, பாடிகார்டு மற்றும் பவுன்சர்கள் அழைத்துக்கொண்டு வரலாமா. ஆனால் இவர் வருகிறார். கூட்டணிக் கட்சியான நாங்களே அவ்வளவு எளிதில் நெருங்க முடிவதில்லை. பொதுமக்கள் எப்படி நெருங்க முடியும் என மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். அதோடு, கூட்டணிக் கட்சியான எங்களை மதிப்பதில்லை" என்று கொந்தளித்தனர்.