கடும் வறட்சி, கொளுத்தும் வெயில்... பசுமை இழந்த ஏற்காடு மலைப்பாதை! | Trees had dried due to summer in Yercaud hill road

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (15/04/2019)

கடும் வறட்சி, கொளுத்தும் வெயில்... பசுமை இழந்த ஏற்காடு மலைப்பாதை!

மிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்றது ஏற்காடு. இது, கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 5,326 அடி உயரம்கொண்டது.

கோடை வெயிலால் வறண்ட ஏற்காடு மரங்கள்

மிகவும் குறைந்த செலவில், ஊட்டியில் உள்ளதுபோன்ற இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளை இங்கும் ரசிக்கமுடியும் என்பதால்,  ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைப்பார்கள்.  ஏற்காட்டின் அழகை ரசிக்க, மலைப்பாதையில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்துசெல்ல வேண்டும்.

trees dried due to summer season

தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகிறார்கள். இங்கு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பகோடா பாயின்ட், ஜென்ஸ் மற்றும் சென்ஸ் சீட் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. ஏற்காட்டின் மலைப்பகுதியில், சில்வர் ஓக் எனப்படும் மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்து நிற்கின்றன. மேலும், இங்கு குறைந்த அளவிலான சந்தன மரங்கள், வாசனை தரும் யூகலிப்டஸ் மரங்களும் உள்ளன. குறிப்பாக, சுமார் 2000 ஹெக்டேருக்கு மேலாக காபி தோட்டம் உள்ளது.

trees

இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஏற்காட்டில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் கொளுத்திவருகிறது. இதனால், ஏற்காடு மலைப்பாதை தொடக்கம் முதல் கிட்டத்தட்ட 16 கொண்டை ஊசி வளைவு வரை, மலைப்பாதையின் இருபுறமும் காணப்பட்ட மரங்கள், தற்போது காய்ந்துவருகின்றன. வெயில் வாட்டுவதால், ஏற்காட்டுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. இதனால், மரங்களின் இலைகள் அனைத்தும் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளிக்கின்றன. தற்போதைக்கு ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் மட்டுமே மரங்கள் அனைத்தும் தப்பும். இல்லையென்றால், அனைத்து மரங்களும் பட்டுப்போகவும் வாய்ப்புண்டு. இதனால், இங்கே வந்து திரும்பும் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.