`தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு வாங்கிய கட்சி!- சிக்கிக் கொண்ட காவலர் | Police personnel has sold his postal vote for Rs. 7,500

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:34 (15/04/2019)

`தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு வாங்கிய கட்சி!- சிக்கிக் கொண்ட காவலர்

நெல்லை மாவட்டம், உவரி காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர் ஒருவர் தனது தபால் ஓட்டை 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தபால் வாக்கை விற்ற காவலர்

தேர்தல் நெருங்கி விட்டதால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தி.மு.க-வின் முன்னாள் நகரச் செயலாளரான ஜெயராஜ் என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். 

கைதான காவலர்அந்த வாகனத்தில் பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனாலும், தபால் வாக்குச்சீட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த வாக்குச்சீட்டு வந்தது குறித்து அவரிடம் விசாரித்தபோது, உவரியைச் சேர்ந்த காவலர் ஒருவரின் தபால் வாக்கு என்பதைத் தெரிவித்திருக்கிறார். அவரிடமிருந்து கிடைத்த காரணம் பற்றி விசாரித்தபோது அதை விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்ததால் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். 

தேர்தல் பறக்கும் படை அதிகாரியான தினேஷ் என்பவர் இது குறித்து திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, உவரியில் பணியாற்றி வரும் அந்தோணி சேகர் என்பவர் தனது தபால் வாக்கை ரூ.7,500 விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதனால் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் காவலர் அந்தோணி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்தச் சம்பவம் பற்றி அறிந்த காவல்துறை உயரதிகாரிகள், துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. காவலர் ஒருவரே தனது வாக்கைப் பணத்துக்காக விற்பனை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.