`நாங்க என்ன தப்பு செய்தோம்' - திருத்தணியில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்  | Protest for water in tiruttani

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (15/04/2019)

கடைசி தொடர்பு:17:53 (15/04/2019)

`நாங்க என்ன தப்பு செய்தோம்' - திருத்தணியில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் 

திருத்தணியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்வோம் என்று கூறியதும் பெண்கள் நாங்கள் என்ன தப்பு செய்தோம் என்று ஆவேசமாகக் கூறினர். 

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

திருத்தணி அருகில் உள்ள வள்ளியம்மாபுரம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 90 நாள்களாக குடிதண்ணீர் வரவில்லை. இதைக் கண்டித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருத்தணி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸார் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது பொதுமக்கள்,``எங்கள் கிராமத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வாழ்வதா சாவதா என்று தெரியாத நிலையில் உள்ளோம். இந்தச் சமயத்தில் தேர்தல் நடத்துகிறார்கள். அதிகாரிகளிடம் குடிநீர் கேட்டு மனு கொடுக்கச் சென்றால் தேர்தல் பணிக்கு அதிகாரிகள் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. குடிநீர் வரும் வரை இந்த இடத்திலிருந்து கலைந்து செல்லமாட்டோம்" என்று ஆவேசமாகக் கூறியதற்கு ``நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் உங்களை கைது செய்வோம் "என்று போலீஸார் தெரிவித்தனர். 

 இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மூதாட்டி ஒருவர்,``எப்.ஐ.ஆர். போட்டு அரஸ்ட் பண்ணுவேன் என்று போலீஸார் கூறுகின்றனர்.  நாங்கள் கொலையா செய்துவிட்டோம். இல்ல கொள்ளையடித்துவிட்டோமா. குடிநீர் வரவில்லை என்றுதானே போராட்டத்தில் ஈடுபட்டோம். குடிநீருக்காகப் போராட்டம் நடத்தியது தப்பா" என்றார். 

 அடுத்து காலிக்குடத்துடன் போலீஸாரிடம் ஒரு பெண் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது, ``நாங்க என்ன தப்பு செய்தோம். நீங்களே சொல்லுங்க அய்யா, மனசாட்சியோடு சொல்லுங்க. தண்ணீர் கேட்டுதானே போராடினோம். ஆறு மாதங்களாக தண்ணீர் வரல. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டோம். தண்ணீர் வரவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலை எங்கள் கிராம மக்கள் புறக்கணிப்பார்கள் "என்றார். 

 இதுகுறித்து திருத்தணி போலீஸாரிடம் கேட்டதற்கு ``சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினோம். அப்போதுதான் அங்குள்ள சில பெண்கள் ஆவேசமாக தங்களின் பிரச்னைகளை எங்களிடம் கூறினர். சாலை மறியல் குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்" என்றனர்.