''எனது அண்ணன் வாழ்ந்த ஊர் இது..!’’ - திருச்சி பிரசாரத்தில் கமல் கையாண்ட புது யுக்தி | MNM chief Kamalhassan election campaign in trichy

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (15/04/2019)

''எனது அண்ணன் வாழ்ந்த ஊர் இது..!’’ - திருச்சி பிரசாரத்தில் கமல் கையாண்ட புது யுக்தி

 நாடாளுமன்றத் தேர்தலில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் வேட்பாளர் ஆனந்தராஜை  ஆதரித்து, அக்கட்சியின்  தலைவர்  கமல்ஹாசன், திருச்சி மத்திய பேருந்து நிலையம்,  ஸ்ரீரங்கம்  உள்ளிட்ட பகுதிகளில்  பிரசாரம் செய்து வருகிறார்.

கமலஹாசன் 

கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், "மற்றக்கட்சிகளைப் போல வேட்பாளர்களை பொம்மையாய் நிறுத்தி வாக்கு கேட்க மாட்டோம். நாங்கள், மக்கள் பிரச்னைகளைக் கூறி வாக்கு சேகரிப்பவர்கள் நாங்கள்" என  மைக்கை வேட்பாளரிடம் கொடுக்கவே... அவரும், எனக்கு வாய்ப்பு தந்தால் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பேன். தேர்தல் நாளில் தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள்” என ஒரு நிமிடம் வாக்கு சேகரித்தார்.

 மக்கள் நீதி மய்யம் 

அடுத்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நல்ல மனிதர்களை அடையாளம் காட்டுவதற்கு நல்ல நாள்தான், தேர்தல் நாள். மக்களே உங்களின் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களியுங்கள்.

 கடந்த சில வருடங்களுக்கு முன்பு, எனது அண்ணன் சந்திரகாசன் வாழ்ந்த ஊர். இப்போது அவர் இல்லை. அப்போது, இதே திருச்சியில் அண்ணன் மட்டும்தான் உறவாய் இருந்தார். இப்போது, உங்களைப்போன்ற நிறைய உறவுகள் உள்ளனர். 

அண்ணன் இருக்கும்போது அரசியலை, சமூக அவலங்களைப் பார்த்துப்பார்த்து கோபப்பட்டோம். அந்தக் கோபத்தை அப்படியே ஒதுக்கிவிடாமல், தற்போது அரசியலில் இறங்கியுள்ளோம். இங்கு, நதிக்கரையும் நாகரிகமும் போய்விட்டது.
கமல்

தண்ணீரில் மஞ்சள் கலந்து நாம் சடங்குகள் செய்வோம். ஆனால் இப்போது, தண்ணீரே மஞ்சளாக வருகிறது. விலங்குகள்கூட தண்ணீரில் கழிவுகளைக் கலப்பதில்லை. ஆனால் அரசு, கழிவுகளை நதிகளில் கலந்துவிடுகிறது. தண்ணீரை சுத்தம்செய்ய அரசு எதையும் செய்யவில்லை. மேலும், தண்ணீரை காசுக்கு விற்கக் கூடாது.

அரசியலில் உள்ள ஆபத்தையும் அசிங்கத்தையும் உணர்ந்து நாம் ஒதுங்கியே இருந்ததால், நதிகள் மாசடைந்துவிட்டன.  அரசு சாராய வியாபாரத்தை வைத்துக்கொண்டு, கல்வியைத் தனியாருக்கு தாரை வார்த்ததால், கல்வியை வியாபாரமாக்கிவிட்டது. அரசுப் பள்ளிகளை மீட்பதை மிக முக்கியமான கொள்கையாக எங்கள் கட்சி வைத்துள்ளது. அப்படி மீட்கப்படும் அரசுப்பள்ளியை உலகத் தரத்திற்கு உயர்த்துவோம். நிச்சயம் செய்வோம். இதுபோல, அரசு நினைக்கவில்லை என்பதுதான் சோகம். இந்த அரசுகள், கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது, பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் எனப் பலர் நினைக்கலாம். ஆனால் திருச்சி மக்கள், தங்கள் பிரதிநிதிகளை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள். அதற்கான தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த நாட்டுக்கு, பெயரே உச்சரிக்கத் தெரியாத பிரதமர்கள் ஏராளமானவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், பிரதிநிதிகளைத் தெரியாமல் இருப்பது சரியாக இருக்கமுடியுமா? தமிழர்கள், தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என்று 1980களில் வந்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொத்தாம்பொதுவாக அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வட இந்தியாவில் அண்ணாதுரை, கக்கன், காமராஜ் பெயரில் ஒரு சிலரை காட்ட முடியுமா. ஆனால் தமிழ்நாட்டில், எண்பதுகளில் அரசியலுக்கு வந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதனால், தமிழர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். ஆனால், திருச்சியில் சில நூறு காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பெயரைக் கட்ட முடியும். ஆனால், தமிழ்நாட்டுத் தலைவர்களின் பெயரை வட நாட்டவர்கள் வைத்துக் கொள்ளவில்லை. அந்த அளவுக்கு தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளார்கள்.

மேலும், வடக்கு தேய்கிறது எனச் சொல்வதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்கள் மணல்கொள்ளை உள்ளிட்டவற்றில் கவனம்செலுத்தி கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாய் இருக்கிறார்கள். அதனால் கண்மூடித்தனமாக, முட்டாள்தனமாக, மனிதத்திற்கு எதிராகப் பல விதமாகச் செயல்படுகிறார்கள். இங்கும் மேசையைத் தட்டிக்கொண்டிருந்தால் ஒன்று ஆகாது.

இங்கு, கோரையாறு கவனிக்காமல் விடப்பட்டதால் பாலாகிவிட்டது. பாலங்களையே கட்டிமுடிக்காதவர்கள். அப்படிப்பட்டவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். இதை நீங்கள் நினைவுகொள்ள வேண்டும். நாங்கள் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. கைதட்டும் நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும்’’ எனப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரசிகர் ஒருவர், தலைவா... உனக்காக உயிரைக் கொடுப்பேன் என்றார்..

அதைக் கேட்ட கமல்,   எனக்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் வாக்கைக் கொடுங்கள் போதும். அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு உயிர்கொடுப்போம். அதற்கான ஆரம்பம் இந்தத் தேர்தல்.

என் முகத்தைத் தன் முகமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார், வேட்பாளர் ஆனந்தராஜ். அவரின் நிஜ முகம் விரைவில் தெரியும். வேறு ஏதாவது என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் சரிவர இயங்கவில்லை என்றால், நீக்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது'' என மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் எழுதிக்கொடுத்துவிட்டு தேர்தலில் நிற்கிறார்.  மீண்டும் சொல்கிறேன்,  நாங்கள் இங்கு சம்பாதிக்க வரவில்லை. சிந்திக்கவேண்டிய நேரம், செயல்படவேண்டிய நேரம்’’ என்றார்.