`எல்லாம் மாறப்போகுது ஒழிச்சுடுவோம் ஜாக்கிரதை!'- ஆய்வாளரை மிரட்டிய எம்.எல்.ஏ மீது வழக்கு | case registered against Kanchipuram Mla

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (15/04/2019)

கடைசி தொடர்பு:20:50 (15/04/2019)

`எல்லாம் மாறப்போகுது ஒழிச்சுடுவோம் ஜாக்கிரதை!'- ஆய்வாளரை மிரட்டிய எம்.எல்.ஏ மீது வழக்கு

தேர்தல் பிரசாரத்தின்போது, காவல் துறையினரை மிரட்டிய காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காஞ்சிபுரம் காவல் துறை. எழிலரசன் தரப்பினரும் காவல் துறையினர்மீது தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம், காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வத்திற்கு பிரசாரம் செய்வதற்காக, நேற்று உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் வந்திருந்தார். தேரடிப் பகுதியில் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் செய்வதற்காக, தி.மு.க-வினர் அனுமதி பெற்றிருந்தார்கள். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காஞ்சிபுரம் வந்திருந்தார். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்திருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வம், தேரடிப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். அங்கே திரண்டிருந்த தி.மு.க-வினர், கொடிகளை உயர்த்திப் பிடித்தனர். இதனால் காவல் துறையினர், ஓ.பன்னீர்செல்வம் வரும்போது கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டாம். இதனால் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படும் என தி.மு.க-வினரிடம் அறிவுறுத்தினர்.

இதைக் கண்டதும் கோபம் அடைந்த காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், ஆய்வாளர் சுரேஷ் சண்முகத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “உதயநிதி வரும் நேரத்தில் ஏன் ஓ.பி.எஸ்ஸுக்கு அனுமதி கொடுத்தீர்கள்?” என்றவர், தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்துப் பேசினார். இப்படிப் பேசாதீர்கள் என காவல்துறையினர் சொல்ல, “யோவ் நான் அப்படித்தான் பேசுவேன். தொலைச்சுடுவேன். எல்லாம் மாறப்போகுது. ஒழிச்சுடுவோம்  ஜாக்கிரதை. ஓட விட்டுருவோம்” என மிரட்டினார். மேலும், பொதுமக்கள் மத்தியில் தரக்குறைவான வார்த்தைகளைக்கொண்டு ஆய்வாளரை மிரட்டியது காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போதே தி.மு.க-வினர் சாலைமறியலில் ஈடுபட்டு போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தினர். நீண்டநேரத்திற்குப் பிறகு, ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்பு, காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

காஞ்சிபுரம் தி.மு.கவினர் புகார் மனு

இந்த நிலையில், எழிலரசன் ஆதரவு வழக்கறிஞர்கள் இன்று, உதயநிதி பிரசாரத்தின் போது காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்பட்டதாக, காஞ்சிபுரம் தேர்தல் பார்வையாளர் டாக்டர் யோகேஷ் மகசி மற்றும் காவல் துறை பார்வையாளர் சிவகுமார் வர்மா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். தேர்தல் நேரத்தில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் அதிகாரிகளிடம் கடுமையான மோதல் போக்கைக் கடைபிடித்தது, கட்சியினரிடையே அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க