அஸ்ஸாம் தொழிலாளிகள் மரணம் எதிரொலி - திருப்பூர் சாய சலவை ஆலைக்கு சீல் | Dying washing unit sealed by district government

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (15/04/2019)

அஸ்ஸாம் தொழிலாளிகள் மரணம் எதிரொலி - திருப்பூர் சாய சலவை ஆலைக்கு சீல்

திருப்பூர் அருகே, தனியார் சாய சலவை ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

திருப்பூர் சாய சலவை ஆலை

திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில், யூனிட்டி வாஷிங் என்ற தனியார்  சாய சலவை ஆலை இயங்கிவந்தது. இதன் உரிமையாளர் ஜெயக்குமார்.  நேற்றைய தினம், ஆலையின் சாயக் கழிவுநீர் தேக்கிவைத்திருந்த தொட்டியைச் சுத்தம்செய்வதற்கு, அங்கு பணியாற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கினார்கள். முதலில் இறங்கிய பாருக் அகமது என்பவர், உள்ளே சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மயங்கி விழ, உடனே அவரைக் காப்பாற்றுவதற்காக சக தொழிலாளிகள் அன்வர் உசேன், தில்வார் உசேன் மற்றும் அபு ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினார்கள். அப்போது, அந்த மூவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அதனைத் தொடர்ந்து, தொட்டிக்குள் விழுந்தவர்களை மற்ற ஊழியர்கள் உதவியுடன் மேலே தூக்கிக்கொண்டுவர, அதில் 3 பேர் உயிரிழந்துபோனது தெரிந்திருக்கிறது.

மேலும், தில்வார் உசேன் என்பவரை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிரும் பிரிந்தது. அதிக அளவு ரசாயனங்கள் அடங்கியுள்ள சாயக்கழிவுத் தொட்டியை எந்தவித பாதுகாப்பு வசதிகளும், இயந்திர உதவியும் இல்லாமல் வெறும் பக்கெட்டுகளைக்கொண்டு தொழிலாளிகளை சுத்தம்செய்யவிட்டதாக, ஆலை நிர்வாகத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, " சம்பந்தப்பட்ட சாய சலவை ஆலையில் சரியான ஆவணங்களும், முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு நடத்திவருவதாகவும், ஆலையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவந்த சம்பந்தப்பட்ட சாய சலவை ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க உத்தரவிட்டதன் பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆலைக்கு சீல் வைத்தனர்.