எம்.ஜி.ஆரும், மோடியும்… அந்த நான்கு அரசியல் முடிவுகள்! | A political comparison between Modi and MGR

வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (15/04/2019)

கடைசி தொடர்பு:21:12 (15/04/2019)

எம்.ஜி.ஆரும், மோடியும்… அந்த நான்கு அரசியல் முடிவுகள்!

எம்.ஜி.ஆரும், மோடியும்… அந்த நான்கு அரசியல் முடிவுகள்!

ந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளைக் கலைக்கப் போவதாகச் செய்திகள் பரவின. இதை எதிர்கொள்ளத் திராவிடம் என்பதையும், திராவிட நாடு கேட்ட அண்ணாவின் பெயரையும் சுமந்த கட்சியின் பெயருக்கு முன்னால் அனைத்திந்திய என்ற வார்த்தை இணைக்கப்பட்டு, தேசியக் கட்சியாக உருமாறியது அ.தி.மு.க. அப்படிப்பட்ட அ.இ.அ.தி.மு.க-வின் தலைவர் நடிகராக தன் வாழ்வைத் தொடங்கி அரசியலில் உச்சம்பெற்ற எம்.ஜி.ஆர். தமிழகத்திற்கு அண்மையில் வந்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, எம்.ஜி.ஆரை கௌரவிக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படும் என்று, அறிவித்து, தற்போது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. 

மோடி

இதற்கு முன்புவரை, அ.தி.மு.க-வை பி.ஜே.பி-யோடு இணைத்துப் பேசி எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும்போதெல்லாம், `நாங்கள் மக்களுக்கான நல்ல திட்டங்களைப் பெறவே மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம்' என்று சாக்கு சொன்னார்கள். தமிழகத்தில் பெரிய வாக்கு வங்கியில்லாத பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, இதரக் கட்சிகளை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தி ஆளும் அ.தி.மு.க. ஒப்பீட்டளவில் அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆருக்கும், தற்போது பி.ஜே.பி-யின் முகமாய் முன்னிறுத்தப்படும் மோடிக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. அரசியலில் அவர்கள் இருவரும் எடுத்த சில முக்கிய முடிவுகள் ஒத்துப்போகின்றன. திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்தவரை எப்படி, `ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம்' என்ற கொள்கையுடைய கட்சியின் தலைவரோடு ஒப்பிட முடியும் என்றால், முடியும் என்பதுதான் பதில். அரசியல் கட்சிகளின் தேர்தல்நேரக் கூட்டணிகளைப் போன்று அரசியல் திருப்பமாக இதைப் பார்க்கலாம்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு:

மண்டல் கமிஷன் அறிக்கையில் ஏழ்மை பற்றிக் குறிப்பிடும் போது, ``ஒருவர் ஏழையாக இருப்பதால் அவர் சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கவில்லை. அதேவேளையில் சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்படுவது ஏழ்மைக்குக் காரணமாக அமைகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் இடஒதுக்கீட்டு வரலாற்றிற்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தவை திராவிட இயக்கங்கள். ஆனால், கட்சியின் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு தீராப்பழியைப் பெற்றுத் தந்தது, அவர் இட ஒதுக்கீட்டில் கைவைத்ததுதான். 9,000 ரூபாய்க்குக் கீழ் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே இனி இடஒதுக்கீடு என்ற அரசாணையை அவர் தன் ஆட்சிக் காலத்தில் வெளியிட்டார். அதற்கான அறுவடையாக 1980-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி என்பதை எம்.ஜி.ஆர். பெற்றார். அப்போது தேர்தல் பிரசாரத்துக்காகத் திராவிடர் கழகம், ``ஆரியத்தை வீரியத்துடன் அணைத்த எம்.ஜி.ஆர்” என ஊரெங்கும் போஸ்டர் ஒட்டியது. தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததற்கான காரணத்தை அறிந்த எம்.ஜி.ஆர்., தமிழகத்தில் 31 சதவிகிதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். 

எம்.ஜி.ஆர்

அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவந்துள்ளது. எப்போதும் இடஒதுக்கீட்டிற்காகத் தமிழ்நாட்டில் எழும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வட இந்தியாவில் நடந்துகொண்டிருக்கின்றன. அவையே அந்தந்த மாநில அரசியலைத் தீர்மானிப்பவையாகவும் மாறிப்போய் விட்டன. குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவர்கள், மகாராஷ்ட்ராவில் மராட்டியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட போராட்டங்கள் உருவாகின. 

கறுப்புப் பணமும், பணமதிப்பிழப்பும்:

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள், பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து தொலைக்காட்சி முன் திரண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகினர் அவர்கள். இனி ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவலைத்தான் பிரதமர் மோடி வெளியிட்டார். அடுத்த சில மாதங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் வாசல்களில் மக்கள் குவிந்தனர். இந்தியா முழுவதும் பலர் உயிரிழந்ததுடன், சிறு, குறு தொழில்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகின. 

பணமதிப்பிழப்பு

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்புத் திட்டத்தை ஏற்கெனவே நடைமுறைப்படுத்திப் பார்க்க எண்ணியவர் எம்.ஜி.ஆர். தி.மு.க-விலிருந்து அவர் வெளியேறிய பின், தன்னுடைய செயல் திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டார். அதில் இடம் பெற்றிருந்த முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, கறுப்புப் பணத்தை ஒழிக்கும்விதமாக 100 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்பதாகும். தற்போது கணினிமயமாக்கப்பட்ட வங்கிகளும், நவீனப் போக்குவரத்து வசதிகளும் உள்ள இந்தக் காலகட்டத்திலேயே பணமதிப்பிழப்பை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

கவனிக்கப்படாத விவசாயிகள்:

எம்.ஜி.ஆர் முதல்வரான பின்னர், படப்பிடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில் தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் உச்சமடைந்திருந்தன. `மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்', `விவசாயிகளின் கடன்களைத் திரும்ப வசூலிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும்' உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. வேடசந்தூரில் போராட்டம் கலவரமாக மாறியது. விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. பதிலுக்கு விவசாயிகளும் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் துப்பாக்கிச் சூட்டில் போய் முடிந்தது. அதில் ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். அதன் விளைவாக நடிக்க ஆரம்பித்திருந்த திரைப்படத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு மீண்டும் முதல்வர் பதவியில் கவனம் செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

விவசாயிகள் போராட்டம்

டெல்லியில், தமிழக விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அரை நிர்வாணப் போராட்டம் உட்பட பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்தினர். ஆனால், கடைசி வரை விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனம் செலுத்தவே இல்லை.

தாக்கப்படும் தாழ்த்தப்பட்டோர்:

விழுப்புரத்தில் 1978-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த சம்பவம் எம்.ஜி.ஆரின் ஆட்சியை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. ஆதிக்கச் சாதிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே நிகழ்ந்த தகராற்றில் 12 பேர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி இதுபற்றிப் பேச, `இது தமிழக அரசின் பொறுப்பு, மாநில அரசுகள்தாம் அதுபோன்ற தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முன்முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும்’ என்றது மத்திய அரசு. எம்.ஜி.ஆர் ஆட்சியின் கவனக்குறைவால் நடந்தது என்று அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி. அரசின் மீது அதிகளவில் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், பசுக் காவலர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள்தாம். அதன் உச்சகட்டமாக பி.ஜே.பி-யின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் உன்னா கிராமத்தில் பசுப் பாதுகாவலர் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

யாராக இருந்தாலும் அரசியலில் நடிக்காமல் இருந்தால் சரிதான்!   


டிரெண்டிங் @ விகடன்