`சகலகலாவல்லவன் படத்துல பார்த்த மாதிரியே இருக்காரு!' - கமலைப் பார்த்து கமென்ட் அடித்த ரசிகைகள் | fans comment over kamal in election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (16/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (16/04/2019)

`சகலகலாவல்லவன் படத்துல பார்த்த மாதிரியே இருக்காரு!' - கமலைப் பார்த்து கமென்ட் அடித்த ரசிகைகள்

கமல் கரூர் வருகை

`நாட்டின் பிரதமர் யார் என்று முடிவுசெய்யும் தேர்தல் மட்டுமல்ல, கரூரின் நிலை என்ன, எங்கள் எதிர்காலம் என்ன என்பதையும் தலைநகரிலேயே கேட்டு நாம் பெறவேண்டியதை பெற்று திரும்பவேண்டிய இடம்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூரில் பேசினார்.

கமல் கரூர் வருகை.

தமிழகத்தில் வரும் 18 ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளையோடு பிரசாரம் முடிவுக்கு வர இருப்பதால், வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் தலைவர்களும் தமிழ்நாடு முழுக்க பரபர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே தன்னுடைய கட்சியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் ஹரிஹரன் அவர்களை ஆதரித்து டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க ஆதரவு கேட்டு பொது மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார்.

கமல் கரூர் வருகை..

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தபிறகு முதன்முறையாக கரூருக்கு கமல்ஹாசன் வந்ததால், `நடிகர் கமல்ஹாசனைப் பார்க்கும்' ஆவலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடினர். அவருக்கு அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், ``கரூர் தமிழகத்தை வழிநடத்த வேண்டும். அநீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்து தொண்டை கட்டினாலும், இவர்கள் கட்டிவைத்திருக்கும் மனக் கோட்டைகள் இடியாது. அதற்கான செயலை தமிழகம் தொடங்கிவிட்டது என்பதற்கான சாயல் இங்கே கூடி நிற்கிறது. மாற்றத்தை எதிர்பார்த்து என்னைப் போல் ஆக வேண்டும் என எதிர்பார்த்து இருக்கும் இவர்கள் என்னைப்போலவே நேர்மையானவர்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மை, உங்களுக்குள் வைத்திருக்கும் அந்த நேர்மையை நாங்கள் பிரதிபலிப்போம். நாட்டின் பிரதமர் யார் என்று முடிவு செய்யும் தேர்தல் மட்டுமல்ல, கரூரில் நிலை என்ன, எங்கள் எதிர்காலம் என்ன. என்பதை தலைநகரிலேயே கேட்டு நாம் பெற வேண்டியதை பெற்று திரும்ப வேண்டிய இடம். இந்த தேசம் முன்னேற வேண்டுமென்றால், மாகாணங்கள், மாவட்டங்கள் சுயாட்சி ஆக இருக்க வேண்டும். நாம் கண்ட அற்புதமான கனவு இந்தியா. அந்தக் கனவைக் கலைத்து, தைத்து வைத்த அற்புதமான இந்த நெசவை தறிகெட்டு போகச் செய்தவருக்கு மத்தியிலே ஒரு கட்சி மட்டும் இருக்கிறது. 1980 களில் தொடங்கிய இந்த ஆபத்து இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதற்கு எதிர் விஸ்வரூபமாக மக்கள் நிற்க வேண்டும். வரும் 18 ம் தேதி ஒரு புதிய புரட்சியை நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும்.. நாளை நமதே" என்று முடித்தார்.

கமல் கரூர் வருகை...

இதற்கிடையில், பல வருடங்களுக்குப் பிறகு கரூருக்கு கமல்ஹாசன் வருகிறார் என்றதால், அவரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அதிகம் வந்தது. கூட்டத்தில் பெண்கள் சிலர், ``கமல்ஹாசன் சகலகலாவல்லவன் படத்துல பார்த்தமாதிரி அப்படியே இருக்காப்புல.." என்று சத்தமாக கமென்ட் அடிக்க, அதைப்பார்த்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் புன்முறுவல் பூத்தனர்.