வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா? - குடியரசுத் தலைவரிடம் அறிக்கை அளித்த தேர்தல் ஆணையம் | EC urges President to cancel election in vellore constituency

வெளியிடப்பட்ட நேரம்: 22:37 (15/04/2019)

கடைசி தொடர்பு:06:44 (16/04/2019)

வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா? - குடியரசுத் தலைவரிடம் அறிக்கை அளித்த தேர்தல் ஆணையம்

வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவர் மாளிகையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அணுகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.

ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம்

காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன. கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, `வருமான வரித்துறை சோதனை குறித்து அறிக்கை அளித்து விட்டதாகவும், தேர்தல் ரத்து குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' என்று பதிலளித்திருந்தார்.

கதிர் ஆனந்த் - துரைமுருகன்

இந்தநிலையில், வேலூர் ரெய்டு குறித்து வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்துக்கு இன்று காலை அறிக்கை அளித்திருக்கிறது. அந்த அறிக்கையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வருமான வரித்துறை வலியுறுத்தவில்லை என்று டெல்லியிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், வருமான வரித்துறை அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று இரவே முடிவு அறிவிக்கப்படும் என்கிறார்கள்.