``நான் பேசினால் தாங்க மாட்டீர்கள்!" – ஈரோடு பிரசாரத்தில் அன்புமணி காட்டம் | anbumani ramdoss campaign at erode

வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (16/04/2019)

கடைசி தொடர்பு:08:33 (16/04/2019)

``நான் பேசினால் தாங்க மாட்டீர்கள்!" – ஈரோடு பிரசாரத்தில் அன்புமணி காட்டம்

``வளர்ச்சி, குடிநீர், வாழ்வாதாரம் என பேசிக் கொண்டிருக்கும் என்னைக் கோபப்படுத்தி, வேறு மாதிரி பேச வைத்துவிடாதீர்கள்” என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அன்புமணி

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து, ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையம் அருகே பா.ம.க மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ``தமிழகத்தின் முதல்வரில் தொடங்கி, பிரதமர் வரை எனக் கூட்டணியில் இருக்கக்கூடிய அனைவருமே விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் இடையே நடந்துவரும் போரில் நாம் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். நம்முடைய கூட்டணித் தலைவர்களோ வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், குடிநீர், வேளாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றி மக்களிடம் பேசி வருகிறோம். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினோ, என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் வாய்க்கு வந்ததையும், தலைவர்களை ஒருமையிலும் பேசி வருகிறார். சென்னை வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, `தமிழகத்தின் மூத்த தலைவர் ராமதாஸ்’ என பெருமையாகப் பேசினார். ஆனால், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா ராமதாஸ் அவர்களை ஸ்டாலின் ஒருமையில் பேசியிருக்கிறார். கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி என பேசிக் கொண்டிருக்கும் என்னை வேறு மாதிரி பேச வைத்துவிடாதீர்கள். நான் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். அது நன்றாக இருக்காது. நாட்டு மக்களுக்கு என்ன வளர்ச்சியைக் கொடுத்தீங்கன்னு ஒரு மேடை அமைத்து என்னோடு விவாதிக்க ஸ்டாலின் தயாரா. நானும் நான்கு வருடங்களாக என்னுடன் மேடையில் விவாதிக்கத் தயாரா எனப் பலரிடம் கேட்டு வருகிறேன். ஒருவரும் வந்த பாடில்லை.

அன்புமணி

தர்மபுரிக்குப் பிரசாரம் செய்ய வந்த ஸ்டாலினின் கொடுக்கு ஒன்று (உதயநிதி ஸ்டாலின்), ‘தர்மபுரியில் அன்புமணியைத் தவிர வேறு வேட்பாளர்களே இல்லையா’ எனக் கேட்டிருக்கிறார். உங்க கட்சியில எப்படி அப்பா, அத்தை, மாமான்னு குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு எல்லாம் பதவியும், சீட்டும் கொடுக்குறீங்க. உங்க கட்சியில உழைக்கின்ற தொண்டர்கள் யாருமே இல்லையா. இப்படித்தான் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தமே இல்லாமல், பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, மீத்தேன் திட்டம் போன்றவற்றை தடை செய்வோம் என ஸ்டாலின் சொல்கிறார். இந்தத் திட்டங்களுக்கெல்லாம் ஒப்புதல் அளித்ததே தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிதான். அவர்களே ஒரு திட்டத்துக்கு கையொப்பம் போடுவார்களாம், அதை எதிர்த்து அவர்களே போராடி, அந்தத் திட்டத்தை அவர்களே ரத்து செய்வார்களாம். என்ன டிசைன் இது. தி.மு.க-வின் இத்தகைய நாடகங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்றார்.