``நீட் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன?” - பேட்டியை முடித்துக்கொண்ட கோவை பா.ஜ.க வேட்பாளர் | C.P.Rathakrishan press meet in covai

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (16/04/2019)

கடைசி தொடர்பு:09:10 (16/04/2019)

``நீட் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன?” - பேட்டியை முடித்துக்கொண்ட கோவை பா.ஜ.க வேட்பாளர்

``ஜி.எஸ்.டியில் எதையெல்லாம் சரிசெய்ய வேண்டுமோ அதையெல்லாம் தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாகச் சரிசெய்து வருகிறார்கள்" என கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்ன் கோவை  பி.ஜே.பி வேட்பாளர்

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ``குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்ற எதிர் அணியினர் ஜி.எஸ்.டி-யால் தொழில் நிறுவனங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பொய்ப் பிரசாரத்தைக் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே இரவில் இந்தியா முழுவதும் உள்ள செக்போஸ்டைத் தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி மட்டுமே. ஜி.எஸ்.டியில் எதையெல்லாம் சரிசெய்ய வேண்டுமோ அதையெல்லாம் தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாகச் சரிசெய்து வருகிறார்கள்.

கிணற்றுத் தவளைகளாக உள்ள கம்யூனிஸ்ட்டுகள் மக்களைக் குழப்பி வருகிறார்கள். வெட்கிரைண்டருக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவிகித ஜி.எஸ்.டி 12 சதவிகிதமாக  குறைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் கடை வைத்திருந்த 23,788 பேர் முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்திருக்கிறார்கள். சொத்துகளை அடமானம் வைக்காமல் ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கியுள்ளது மோடியின் சிறப்பான அரசு. கோவைக்கு நாம் ராணுவ தொழில்நுட்ப பூங்காதான் கேட்டோம். ஆனால், மத்திய அரசு ராணுவ தொழிற்பேட்டையையே கொடுத்துள்ளார்கள்

சிறு, குறு தொழில் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கிடையாது. தி.மு.க ஆட்சி இருக்கும்போது 14 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது மின்வெட்டு பிரச்னையே இல்லை. மின்வெட்டை சரி செய்ய முடியாத இவர்கள், தொழில் வளர்ச்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவர்கள். தமிழகம் எங்கேயும் புறக்கணிக்கப்படவில்லை. பா.ஜ.க ஆளும்  மாநிலங்களைவிட,  தமிழகத்தில் பத்து ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்குப் பிறகு பிரமாண்டமாக உருவெடுக்கும். அப்போது ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் பயனடைவார்கள்.

கோவையிலிருந்து சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படும்.
யார் என்ன சொன்னாலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும். நீர் ஆதாரங்களைச் சரிசெய்ய அதிக கவனம் செலுத்தி நீர் ஆதாரங்களைப் பெருக்குவோம். சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள 200 ஏக்கர் பரப்புள்ள ஏரியை அதிக நிதி பெற்று தூர்வார நடவடிக்கை எடுப்போம். ஜி.எஸ்.டியால்தான் அதிக தொழில் நிறுவனங்கள் மூடிக்கிடப்பதாகச் சொல்வது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. காவிரி நதிநீர் ஆணையத்தைக் தூக்கி எறிவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் தங்களது அறிக்கையில் சொல்லியுள்ளார்கள். நீட்டினால் நன்மைதான் ஏற்பட்டிருக்கிறது” என்றவரிடம் இறுதியாக நீட் தொடர்பாக பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ற கேள்வி எழுப்பப்பட்டது, கேள்வி எழுப்ப உங்களுக்கு உரிமை இருக்கிறது. பதில் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது' என்றவர் பதில் எதுவும் சொல்லாமல் பேட்டியை முடித்துக்கொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க