`ஜே.கே.ரித்தீஷின் ஆசை நிறைவேறாமல் போயிடுச்சே!'- கண்கலங்கியபடி நினைவலைகளைப் பகிரும் நடிகர் | actor vijay karthik shares about rithish

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:04 (16/04/2019)

`ஜே.கே.ரித்தீஷின் ஆசை நிறைவேறாமல் போயிடுச்சே!'- கண்கலங்கியபடி நினைவலைகளைப் பகிரும் நடிகர்

நடிகர் ரித்தீஷ் ஜெயலலிதா

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மறைவு, அவரைச் சார்ந்துள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

 ``சார், நீங்கள் இந்தமுறை ராமநாதபுரம் எம்.பி.தொகுதியில் போட்டியிடுங்கள் உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்'' என்று ஜே.கே.ரித்தீஷ் என்னிடம் கூறினார். அதோடு இல்லாமல் எனக்காக ராமநாதபுரம் தொகுதிக்கு பணம் கட்டியதோடு கட்சித் தலைமையிடம் ராமநாதபுரம் தொகுதிக்கு விருப்பமனுத்தாக்கல் செய்தார். கட்சித் தலைமை நடத்திய நேர்காணலின்போதுகூட தொகுதி குறித்து புள்ளிவிவரங்களுடன் பேசினேன். அதற்கெல்லாம் என்னுடைய அண்ணன் ஜே.கே.ரித்தீஷ்தான் காரணம். அப்படிப்பட்டவரைத்தான் நான் இழந்துநிற்கிறேன்'' என்று வேதனையுடன் கூறினார் நடிகரும் அ.தி.மு.க. நிர்வாகியுமான தென்சென்னையைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் என்கிற விஜய்கார்த்திக். 

சிறிது அமைதிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார். ``அவரும் நானும் நீண்ட தூரம் பயணித்திருக்கிறோம். எனக்கு அவர் நல்ல நண்பர் என்று சொல்வதைவிட குடும்ப நண்பர் என்று சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நண்பர் இனிமேல் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கிடைப்பாரா என்பது கேள்விக்குறிதான். ரித்தீஷின் உறவினர் ஒருவர் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். இருவரும் சினிமாத்துறையில் இருந்ததால் எங்களின் நட்பு தொடர்ந்தது. தி.மு.க.வில் எம்.பியான பிறகு அந்தக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய அவர் முடிவு செய்தார். அந்தத் தகவலை என்னிடம் கூறினார். அப்போது அவர் அ.தி.மு.க வில் இணைய உறுதுணையாக இருந்தவர்களில் நானும் ஒருவன். கட்சிப்பணி, சினிமா என எங்கள் இருவரின் பயணமும் தொடர்ந்தது. 

 நடிகர் ரித்தீஷ் ஓ.பன்னீர்செல்வம்

எந்நேரமும் எளிமையாக இருப்பவர். என்னிடம் பாசமாக இருந்தார். எனக்கு பல வகையில் உதவியாக இருந்தார். தன்னம்பிக்கை என்றால் அது ரித்தீஷ் என்றுதான் சொல்ல வேண்டும். நானும் அவரும் சேர்ந்து `இரட்டை இலை' என்ற படத்தை இயக்கி நடிக்க ஆசைப்பட்டோம். இதில் நானும் அவரும் ஹீரோ. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. என்னை அன்புடன் சார் என்றுதான் அழைப்பார். நான் அவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன். அவருடன் பல ஊர்களுக்கு காரில் பயணம் செய்துள்ளேன்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், நானும் அவரும் ஆந்திராவுக்கு காரில் சென்றோம். பள்ளிப்பட்டுப் பகுதியில் காரில் சென்றபோது அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் மாங்காய் விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண். ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அங்கு காத்திருந்தோம். அப்போது மாங்காய் விற்ற பெண், ரித்தீஷிடம் `சார், மாங்காய் வாங்கிக்கோங்க. ஆந்திரா காய் நல்லா ருசியாக இருக்கும்' என்று கூறினார். அந்தப் பெண்ணிடம் மாங்காய் எவ்வளவு எனக் கேட்டார். அப்போது அந்தப்பெண் கூறிய விலையைவிட குறைவாக வேண்டும் என ரித்தீஷ் பேரம் பேசினார். ஆனால் ரித்தீஷ் கேட்ட விலைக்கு அந்தப் பெண் கொடுக்கவில்லை. அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கே ரித்தீஷ் கடும் ஆச்சர்யத்தைக் கொடுத்தார். 

 அதாவது, அந்தப் பெண் கூறிய விலைக்கே மாங்காயை வாங்குவதாகக் கூறிய ரித்தீஷ், மாங்காயை வாங்கிக் கொண்டு 10,000 ரூபாயை அவரிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு ரித்தீஷ் யாரென்றே தெரியாது. எதற்கு இவ்வளவு பணம் கொடுத்தீர்கள். ஏன் பேரம் பேசினீர்கள் என்று ரித்தீஷிடம் கேட்டதற்கு, என்னிடம் அவர் சொன்ன பதில், `பாவம் சார். அந்தப் பெண் குடும்பத்துக்காக மாங்காய் விற்கிறார். இந்தப் பணத்தில் கடை வைத்து பிழைத்துக் கொள்ளதான் அவ்வளவு பணம் கொடுத்தேன்' என்று கூறினார். இதுபோல பல சம்பவங்களைச் சொல்லலாம். 

 நடிகர் ரித்தீஷ், விஜய்கார்த்திக்   

இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் `ஹார்ட் அட்டாக்' என ரித்தீஷ் அட்மிட்டாகிய செய்தி எனக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றேன். அப்போது அவரை டாக்டர்கள் அவருக்கு `ஸ்டெட்' வைத்தனர். உயிர்பிழைத்த ரித்தீஷிடம், உடம்பையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால் அவரோ, கட்சிப்பணி, சினிமா என பிஸியாக இருந்தார். ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தலில் ராமநாதபுரத்தில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க போட்டியிடுகிறது. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் துணை நடிகர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் உடல்நிலையை கவனத்தில் கொள்ளவில்லை. அதுதான் அவருக்கு இந்தச் சின்னவயதில் இப்படியொரு முடிவை இயற்கை கொடுத்துவிட்டது. 

ராமநாதபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது அங்கு நான் சென்றேன். மோடி கூட்டத்தில் நான் கலந்து கொள்ள விவிஐபி பாஸ் கொடுத்தார். ஆனால், அவர் மோடி கூட்டத்துக்கு வரவில்லை. அவருக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி. கூட்டம் முடிந்தபிறகு அமைச்சர் ஒருவரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வர என்னிடம் கூறினார். அந்த அமைச்சரும் ரித்தீஷ் வீட்டில் விருந்து சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அமைச்சரை வழியனுப்ப வாசல் வரை வந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் ஏறியபோதுதான் அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்துள்ளார். உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதுதான் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 நடிகர் ரித்தீஷ், விஜய்கார்த்திக்

இந்தத் தகவல் கிடைத்தபோது நான், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க மதுரைக்குச் சென்றுகொண்டிருந்தேன். உடனடியாக நான் ராமநாதபுரத்துக்குச் சென்றேன். அங்கு அவரை நான் பார்த்தபோது என்னை அன்போடு சார் என்று அழைக்கும் அவர் உயிரற்ற சடலமாகப் படுத்திருந்தார். அவரை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிவேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. கடைசியாக அவர், என்னிடம் வீட்டுக்கு வந்து சாப்பிடச் சொன்னார். ஆனால் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது...." என்றவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

துணை நடிகர்கள் மட்டுமல்லாமல் உதவி எனக் கேட்பவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை ரித்தீஷ் செய்துள்ளார். அவருடன் பழகியவர்கள் என்றுமே அவரை மறக்க மாட்டார்கள். அதுதான் ரித்தீஷின் ஸ்பெஷாலிட்டி என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.