`எத்தனை ரெய்டு வந்தாலும் அசர மாட்டோம்!'- அரக்கோணம், வேலூர் தொகுதிகளில் பறக்கும் கரன்சி | In Vellore money supply to voters

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (16/04/2019)

கடைசி தொடர்பு:13:35 (16/04/2019)

`எத்தனை ரெய்டு வந்தாலும் அசர மாட்டோம்!'- அரக்கோணம், வேலூர் தொகுதிகளில் பறக்கும் கரன்சி

`எத்தனை ரெய்டு வந்தாலும் அசர மாட்டோம்!'- அரக்கோணம், வேலூர் தொகுதிகளில் பறக்கும் கரன்சி

வேலூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிகளில் `காஸ்ட்லி’ வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் ஓட்டுக்குப் பணம் கட்டுக்கட்டாக இறைக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 2,000 ரூபாயும், தி.மு.க கூட்டணி 500 ரூபாயும் இரவோடு இரவாக விநியோகித்து கச்சிதமாகப் பணப்பட்டுவாடாவை முடித்துள்ளதாகத் தகவல் எழுந்துள்ளது.

வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்காக பிரசாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் ஆகியோர் தேர்தல் களத்தில் ஆடு புலியாட்டம் ஆடுகிறார்கள். ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகள்தாம் வேலூர் நாடாளுமன்ற வெற்றியைத் தீர்மானிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள வாக்காளர்களைப் பண மழையால் குளிப்பாட்டுகிறார்களாம். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓர் ஓட்டுக்கு 2,000 ரூபாயும், மற்ற பகுதிகளில் ஓட்டுக்கு 500 ரூபாயும் கச்சிதமாகக் கொடுத்துமுடித்துள்ளார்களாம். வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கைகோத்து கரன்சியை இறைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

துரைமுருகன் மகனுக்காக வாக்குசேகரித்த மு.க.ஸ்டாலின்

பூத் வாரியாகக் கட்சிக்காரர்கள் மற்றும் பொது வாக்காளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தனித்தனியாகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஓட்டுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 13-ம் தேதி சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்புகளைக் காண்பிக்கச் சொல்லி பணம் கொடுத்துள்ளதாகவும் கின்னஸ் சாதனைக்கு முயல்வதைப்போல விறுவிறுவென அ.தி.மு.க பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பதற்றமோ, பயமோ இல்லாமல் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பணம் கொடுத்துள்ளனர் என்றும் ஆளும்கட்சி விவகாரம் என்பதால் பறக்கும் படை, வருமானவரித் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர் என்றும் கூறுகின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

``அதிகாரிகள் கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தி.மு.க-வை மட்டும் வேவு பார்க்கின்றனர். தி.மு.க-வைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் தொகுதிகளில் ரூ.500-ம், மற்ற பகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாயும் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே, ரூ.10 கோடிக்கும் அதிகமான பணம் ஐ.டி ரெய்டில் சிக்கியிருப்பதால் துரைமுருகன் தரப்பில் ஓட்டுக்கான விலையைக் குறைத்திருக்கிறார்கள். வருமானவரித் துறையினர் நிழல்போலப் பின்தொடர்கின்றனர்'' தி.மு.க அனுதாபிகள். அ.தி.மு.க., தி.மு.க-வினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்துள்ளதை, அ.ம.மு.க நிர்வாகிகள் மறைமுகமாக செல்போன் மற்றும் கேமராவில் போட்டோ, வீடியோ எடுத்து பேரம் பேசி பணம் பறித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, தி.மு.க வேட்பாளரான ஜெகத்ரட்சகன் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப் போகிறார் என்று பேச்சு அடிபட்ட நிலையில், ஓட்டுக்கு 300 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டுக்கு 500 ரூபாய்தான் தி.மு.க-வினர் கொடுத்துள்ளதாகவும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க கைகோத்து ஓட்டுக்கு 2,000 ரூபாய் கச்சிதமாகக் கொடுத்துமுடித்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற பகுதிகளில் பா.ம.க தரப்பில் 500 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் `பூத்’ சிலிப் இல்லாதவர்களுக்குப் பணம் கொடுக்கவில்லையாம். இதனால், அ.தி.மு.க மற்றும் தி.மு.க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தார்களாம். 

`பணம் கொடுக்கவில்லையென்றால் ஓட்டு போட மாட்டோம்’ என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். ``பூத் சிலிப் அடிப்படையில்தான் பணம் விநியோகிக்க எங்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சிலிப் இல்லாதவர்களுக்குப் பணம் கொடுத்தால் கணக்கு காட்டமுடியாது. பணத்தை நாங்கள் சுட்டுவிட்டோம் என்று சந்தேகப்படுவார்கள்’’ என்றுகூறி கட்சிக்காரர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். பணப் பட்டுவாடாவைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வேலூர், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.