`கருத்துக்கணிப்புல ஆயிரம் வரும், ஆட்சி மாறாது?'- அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி | edappadi palanisamy comforts ministers; says admk government will go on

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:29 (16/04/2019)

`கருத்துக்கணிப்புல ஆயிரம் வரும், ஆட்சி மாறாது?'- அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி

தேர்தல் யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் தமிழகம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓயும் நிலையில், பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெறுகிறது. இடைத்தேர்தலைச் சந்திக்கும் சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க 2000 ரூபாயும், தி.மு.க. 500 ரூபாயும் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தொகுதிகளில் 400 ரூபாய்க்குக் குறையாமல் ஆளுங்கட்சி அள்ளிவிடுகிறது.

எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பறிகொடுக்கும் தருவாயில், தங்களது ரகசியங்களை வெளிப்படுத்தும் கோப்புகளை அழித்துவிடுவது வழக்கம். 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வென்றாகவேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க உள்ளது. எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத தி.மு.க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட எண்ணுகிறது. இந்த ஆடுபுலி ஆட்டத்தில், தி.மு.க வென்றுவிட்டால், தங்களது தகிடுதத்தங்கள் பிரச்னையாகலாம் எனக் கருதும் சில அமைச்சர்கள், முக்கியமான சில கோப்புகளை அழித்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

“கருத்துக்கணிப்புல ஆயிரம் வரும். அதெல்லாம் உண்மையாகிடுமா? 2011 தேர்தல்ல தி.மு.க தான் மெஜாரிட்டியோட ஜெயிக்கும்னு சொன்னாங்க. உளவுத்துறையும் அந்த ரிப்போர்ட்டு தான் கொடுத்துச்சு. 146 இடத்துல ஜெயிச்சு நாம ஆட்சியைப் பிடிக்கலயா? 2014 தேர்தல்ல நாம 27 இடத்துக்கு மேல போக மாட்டோம்னு கருத்துக்கணிப்பு போட்டாங்க. கடைசில 37 இடம் ஜெயிச்சோம்.

திருப்போரூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், பெரியகுளம், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், மானாமதுரை எனக் 9 சட்டமன்றத் தொகுதிகள் நமக்கு சாதகமாதான் இருக்கு. இதுபோக, இன்னும் நாலு தொகுதிகளுக்கு தனியா தேர்தல் வரப்போகுது. அதையும் நாமதான் அடிக்கப்போறோம். நம்ம ஆட்சி போகாதுய்யா, தைரியமா இருங்க” என்று நம்பிக்கை அளித்துள்ளார். முதல்வரின் நம்பிக்கையான வார்த்தைகளால், அமைச்சர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்கள். உண்மையான நிம்மதியை மக்கள் அளித்துள்ளார்களா என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.

 

loading...