`நீங்கதான் இன்னைக்கு ஹைலைட்!’ - தேரோட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களை நெகிழவைத்த பக்தர்கள் | Devotees praises sweepers in tanjavur temple car festival

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (16/04/2019)

`நீங்கதான் இன்னைக்கு ஹைலைட்!’ - தேரோட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களை நெகிழவைத்த பக்தர்கள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில், தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.தேர் சென்றதற்கு அடுத்த சில விநாடிகளில், குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம்செய்த துப்புரவுப் பணியாளர்களைப் பக்தர்கள் மனதாரப் பாராட்டினர். துப்புரவுத் தொழிலாளர்கள்  நெகிழ்ச்சியடைந்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் ஓட தொடங்கியது. இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கெல்லாம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர். தேர் சென்ற நான்கு ராஜாவீதிகளின் இருபுறமும் மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர். பல இடங்களில் பக்தர்களுக்கு நீர் மோர்,சர்பத் போன்றவை வழங்கப்பட்டன.மேலும், சமூக ஆர்வலர்கள் பலர் தேர் சென்ற பகுதியில் பல இடங்களில் அன்னதானம் வழங்கினர்.

பெரும் கூட்டம். எங்கு பார்த்தாலும் அன்னதானம் நடைபெற்றதால், தேர் சென்ற வீதிகளில் ஒரே குப்பைகளாகக் குவிந்து கிடந்தன. குப்பைகளைச் சுத்தம் செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  10-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர் சென்ற பின், அடுத்த சில விநாடிகளில் வந்த துப்புரவுத் தொழிலாளர்கள், குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தனர். கொஞ்ச நேரத்தில் தேர் சென்ற தடமே தெரியாத அளவிற்கு வீதிகள் சுத்தம் செய்யப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளியும் ஏதோ சுத்தம் செய்கிறோம் என இல்லாமல் ஈடுபாட்டுடன் வேலைசெய்தனர்.

குழந்தைகளுடனும், பெரியவர்கள், குடும்பத்தினர்களுடனும் ஆயிரக்கணக்கான மக்கள் தேரோட்டத்திற்கு வந்திருந்தனர். தேர் சென்ற உடனே துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களைப் பலர், ``நீங்க  ரொம்ப பெரிய காரியம் பண்ணியிருக்கீங்க. தேரோட்டத்தைவிட உங்களோட உழைப்புதான் இன்னைக்கு ஹைலைட்’’  என மனதாரப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பக்தர்கள் பாராட்டில் நெகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள், ``குப்பைகளோடுதான் எங்கள் வாழ்கை. பசியைப் போக்க இந்தப் பணியைச் செய்யவில்லை. தெருவை சுத்தமாக வைத்திருப்பதை மனத்தளவில் நேசித்தே செய்கிறோம். எங்க பணியைப் பார்த்து எங்களைப் பாராட்டியது மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று நெகிழ்ந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க