`உங்கள நம்பமுடியாது, இங்கிருந்து போயிடுங்க!' - விரட்டப்பட்ட அ.ம.மு.க பெண் வேட்பாளர் | Kudiyatham village people opposes AMMK candidate's election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:10 (16/04/2019)

`உங்கள நம்பமுடியாது, இங்கிருந்து போயிடுங்க!' - விரட்டப்பட்ட அ.ம.மு.க பெண் வேட்பாளர்

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க பெண் வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபனை, வாக்கு சேகரிக்கவிடாமல் கிராம மக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.ம.மு.க வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், அ.ம.மு.க சார்பில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். பிரசாரத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே ஜெயந்திக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுவருகின்றன. பல கிராமங்களில் வாக்கு சேகரிக்க ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் விரட்டியடித்தனர். இந்த நிலையில், நேற்றிரவு பேரணாம்பட்டு ராமச்சந்திராபுரத்தில் பிரசாரத்துக்குச் சென்ற ஜெயந்தியை கிராம மக்கள் ஏராளமானோர் வழிமறித்தனர். 

‘‘கடந்த முறை உங்களை வெற்றிபெறச் செய்தோம். தொகுதி மக்களுக்காக ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால், பணத்திற்காக டி.டி.வி.தினகரன் பக்கம் சென்று, எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள். மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறீர்கள். தலைகீழாக நின்றாலும் உங்களுக்கு நாங்கள் ஓட்டுப்போட மாட்டோம். மரியாதையாகச் சொல்கிறோம். திரும்பிப் போங்க’’ என்று கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், ஜெயந்தி பத்மநாபன் பிரசார வாகனத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார். 

இதைத் தொடர்ந்து, ஏரிகுத்தி பகுதிக்குச் சென்ற ஜெயந்தியை அங்குள்ள மக்கள் தடுத்தனர். ‘‘அம்மா பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க உங்களுக்கு அருகதையில்லை. உங்களுக்கு மீண்டும் ஓட்டுப்போட்டு வெற்றிபெறச் செய்தால், வேறு யாராவது பணம் கொடுக்கிறோம் என்று அழைப்பார்கள். உடனே அங்கு சென்றுவிடுவீர்கள். உங்களை நம்பமுடியாது. இங்கிருந்து போயிடுங்க’’ என்று கடுமையாக விமர்சனம் செய்து விரட்டியடித்ததால், அ.ம.மு.க வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் சோகமாக இருக்கிறார்.

loading...