`வீடு வீடாக, கடை கடையாகச் சென்றார் முதல்வர்!' - கடைசி நாளில் நடந்த வாக்குசேகரிப்பு | CM EPS election campaign in salem

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (16/04/2019)

`வீடு வீடாக, கடை கடையாகச் சென்றார் முதல்வர்!' - கடைசி நாளில் நடந்த வாக்குசேகரிப்பு

முதல்வர் வாக்கு சேகரிப்பு

17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைய இருப்பதால் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் என அனைவரும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சகட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் சொந்த மாவட்டமான சேலத்தில் வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 18-ம் தேதி  நடைபெறுவதால் இன்று மாலையோடு தேர்தல் பிரசாரம் நிறைவடைய இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 20-ம் தேதி சேலம் மாவட்டத்திலிருந்து தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தவர் இன்று சேலத்திலேயே தன் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பிரசாரம்

தேர்தல் பிரசாரம் இன்று இறுதி நாள் என்பதால் காலையிலிருந்து சேலம் பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, தேர் வீதி, பஜார்தெரு, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம் எனப் பல பகுதிகளில் வீடு வீடாகவும், கடை, கடையாக நடந்து சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து சரவணனுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.   

முதல்வர் தேர்தல் பிரசாரத்தின்போது கடைத்தெருவில் உள்ள சாலையோர வியாபாரிகளைச் சந்தித்து தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய் எனக் காய்கறிகளைத் தொட்டு என்ன விலை என்று கேட்டதற்கு வியாபாரிகள், தக்காளி 40 ரூபாய், சின்ன வெங்காயம் 30 ரூபாய் என்றதும் வியப்படைந்தார். பிறகு டீக்கடைக்காரரிடம் வாக்கு கேட்டவர் அவரிடம் டீ போடச் சொல்லிக் குடித்தார். முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான அ.தி.மு.க-வினர் குவிந்ததால் அம்மாப்பேட்டை ஏரியாவே அமர்க்களம் ஆனது.

 


loading...