`அடையாளம் தெரியல, அவருக்கு வாக்களித்தால் என்ன பயன்!' - யாரை விமர்சிக்கிறார் திருநாவுக்கரசர் | Tirunavukkarasar election campaign in trichy constituency

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (16/04/2019)

கடைசி தொடர்பு:17:30 (16/04/2019)

`அடையாளம் தெரியல, அவருக்கு வாக்களித்தால் என்ன பயன்!' - யாரை விமர்சிக்கிறார் திருநாவுக்கரசர்

``எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக வாக்களிக்க விரும்பும் அ.தி.மு.க தொண்டர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பணியாற்றிய எனக்கு வாக்களியுங்கள். உங்களுக்காக நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன்'' எனத் திருச்சித் தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் பேசினார்.

திருநாவுக்கரசர் பிரசாரம்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புதுக்கோட்டை மாவட்டம் உடையாலிப்பட்டி, கீரனூர், கிள்ளுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "எம்.ஜி.ஆர் மூலம் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதாவால் நடத்தப்பட்டு வந்த அ.தி.மு.க, இருவரின் மறைவுக்குப் பின் தற்போது சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. அந்தக் கட்சி தற்போது சிதறியுள்ளது. குறிப்பாக, தொண்டர்கள் மனச்சோர்வுடன் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர்.

நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் கடந்த காலங்களில் பணியாற்றி இருக்கிறேன். திருச்சி தொகுதியில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடவில்லை. எனவே, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க விரும்புவார்கள், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் எனக்கு வாக்களியுங்கள். உங்களுக்காக நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாலும், சுயேச்சையாக நிற்கும் அ.ம.மு.க வேட்பாளருக்கும் வாக்களிப்பதாலும், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. மேக்கேதாட்டூ விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் இங்குள்ளவர்கள் தவறான தகவல்களை அளித்துள்ளனர். தமிழகத்தின் தற்போதைய உண்மை நிலையை அவரிடம் எடுத்துக்கூறி தமிழக உரிமைகளை நிலை நாட்டப் பாடுபடுவேன்" என்றார்.