`கூல்டிரிங்க்ஸ் குடித்ததும் மயங்கிவிட்டேன்!'- ஏரிக்கரையில் மீட்கப்பட்ட சிறுமி கண்ணீர் | Tiruvallur police booked two auto drivers in pocso

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:55 (16/04/2019)

`கூல்டிரிங்க்ஸ் குடித்ததும் மயங்கிவிட்டேன்!'- ஏரிக்கரையில் மீட்கப்பட்ட சிறுமி கண்ணீர்

திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரை பகுதிக்கு ஆட்டோவில் வந்த மூன்று பேர், மயங்கிய நிலையிலிருந்த
சிறுமி ஒருவரை கீழே இறக்கினர். அதைப் பார்த்தவர்கள் சத்தம் போட, ஆட்டோவில் வந்த ஒருவர் தப்பி ஓட, இருவர் சிக்கிக்கொண்டனர். 

 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் வேலைபார்த்துவந்தனர். இந்தச் சமயத்தில், அந்தப்பகுதியில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த ஆட்டோ நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கிய மூன்று பேர், சிறுமி  ஒருவரை கைத்தாங்கலாகக் கீழே இறக்கினர். பிறகு, அவரை  ஏரிக்கரையில் படுக்க வைத்தனர். இதை தூரத்திலிருந்து பார்த்தவர்கள், என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்தனர். அதன்பிறகு, அவரிடம் ஆட்டோவில் வந்தவர்கள் அநாகரிகமாக நடக்க முயன்றனர். ஆனால், அவரிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. இதைப் பார்த்தவர்கள் அருகில் இருந்தவர்களிடம் கூறினர். 

இதையடுத்து, ஆட்டோ நின்றுகொண்டிருந்த இடத்துக்கு தொழிலாளர்கள் ஓடினர். அதைப் பார்த்ததும் ஆட்டோவில் ஏறி அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அப்போதுகூட அந்தச் சிறுமி  அங்கேயே படுத்திருந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற தொழிலாளர்கள், அந்தச் சிறுமியின் நிலையைப் பார்த்து கண்ணீர்விட்டனர்.  அப்போதுதான் தெரிந்தது, அந்த சிறுமி  மயக்கத்தில் இருப்பது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆட்டோவை விரட்டிச் சென்றவர்கள், இரண்டு பேரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் மட்டும் யாரிடமும் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். 

108 ஆம்புலன்ஸ் வந்ததும் அந்தச் சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், சிக்கிய இரண்டு பேரும் மணவாளன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர், சில நாள்களாக சுற்றித்திரிந்துள்ளார். அவர், அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு வந்துள்ளார். அதை நோட்டமிட்ட ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் அன்பாகப் பேசியுள்ளனர். அப்போது அவர், தன்னுடைய சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் என்று பெயர் விவரங்களைக் கூறியுள்ளார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள், சிறுமிக்கு மருந்தைக் கலந்து கொடுத்துள்ளனர். ஆட்டோ டிரைவர்கள் கொடுத்த கூல்டிரிங்க்ஸை நம்பி குடித்த அவர், மயங்கியுள்ளார். இதையடுத்து, அவரை ஆட்டோ மூலம் ஆள் நடமாட்டம் இல்லாத பட்டறை கிராமத்தையடுத்த அதிகத்தூர் ஏரிக்கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

ஆட்டோவில் வரும்போதே அந்தச் சிறுமியிடம் அவர்கள் அத்துமீறியுள்ளனர். ஏரிக்கரையிலிருந்தவர்கள் பார்த்துதான் அவரை மீட்டுள்ளனர். பொதுமக்கள் எங்களிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தபோது, ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன், அதிகத்தூரை சேர்ந்த முனுசாமி  எனத் தெரியவந்தது. அவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்த வழக்கில் இன்னொருவரைத் தேடிவருகிறோம். சிறுமியின் உறவினர்கள் குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைபெறும்  சிறுமி, மயக்கம் தெளிந்ததும் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் ஆட்டோ டிரைவர்கள் கூல்டீரிங்க்ஸ் வாங்கித் தந்தனர். அதைக் குடித்த பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிறுமி எப்படி திருவள்ளூருக்கு வந்தார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.  

பட்டப்பகலில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரைக்கு ஆட்டோவில் அழைத்து வந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.