`நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களியுங்கள்!' - இல.கணேசன் | BJP Ila Ganesan campaign in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:19:43 (16/04/2019)

`நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களியுங்கள்!' - இல.கணேசன்

கோவை பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரசாரம் செய்ய, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் இன்று கோவை வந்திருந்தார். செட்டிவீதியில் 1 மணிக்கு இருசக்கர வாகன பேரணி தொடங்குவதாக இருந்தது. ஆனால், பேரணி 2.30 மணிக்குதான் தொடங்கியது.

இல.கணேசன்

காரில் இருந்து இல.கணேசன் இறங்கிய உடன், ஜி.கே.நாகராஜ் மற்றும் மாவட்டத் தலைவர் நந்தகுமார் ஆகியோரைப் பார்த்து, “என்னயா நீங்க எல்லாம் பிரசாரத்துக்குப் போறேதே இல்லையா? பளீச்சுனு இருக்கீங்க... யார் மூஞ்சியும் கருப்பாகலை” என்று கேட்டார். அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே, “சி.பி.ஆர் போறார், அவர் கருப்பாகிட்டாரு” என்று பதில் கூறினார்கள். அங்கு பி.ஜே.பி-யினரே அதிகம் தென்பட்டனர். அ.தி.மு.க-வினர் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தனர். அதிலும்  ஒருவர், “நான் டி.டி.வி-க்குதான் ஓட்டு போடுவேன்” என்றார் கோபமாக. “பிறகு எதற்காக, இப்படி அ.தி.மு.க கட்சி கொடியோட சுத்திட்டு இருக்கீங்க” என்று கேட்டதற்கு, “இங்க வந்தா பெட்ரோலுடன் காசு கொடுக்கிறோம்னு சொன்னாங்க.. அதனால வந்தேன்” என்றார்.

இல.கணேசன் பேசும்போது, “புல்வாமா தாக்குதலை ஆதரித்து பேசி வரும் தமிழக முதல்வர்” என்று உளறிவிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், “மன்னிக்கவும்… தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்” என்று திருத்திக்கொண்டு, பி.ஜே.பி-யின் அருமை பெருமைகளை பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், ``இந்தத் தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இதில், எந்தக் கட்சியும் விலைவாசி குறித்த பேசவில்லை. அந்த அளவுக்கு பி.ஜே.பி ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. நாடு, வீடு, மாடு காக்க மோடிக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தமிழர்களின் காட்டுமிராண்டிதனமான விளையாட்டு என விமர்சித்த விடியோ வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பி.ஜே.பி வெற்றி பெறும். சுப்ரமணியசுவாமி சுதந்திரமானவர் என்பதால், அவர் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அவரது கருத்து பி.ஜே.பி-யை பாதிக்காது” என்றார்.

loading...