அடடா.. எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கா இந்த நிலைமை! - தேர்தல் பிரசாரத்தில் நேர்ந்த கொடுமை | ADMK candidate skin affected because of campaigning in the summer

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (16/04/2019)

அடடா.. எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கா இந்த நிலைமை! - தேர்தல் பிரசாரத்தில் நேர்ந்த கொடுமை

சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் சரும பாதிப்பில் சிக்கியுள்ளார்.

எம்.எஸ்.எம். ஆனந்தன்

தமிழகத்தில், வரும் ஏப்ரல் 18 - ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன. ஒவ்வொரு தொகுதியைச் சேர்ந்த வேட்பாளரும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொண்டிருந்த சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு இந்தத் தேர்தல் பிரசார பயணமே வேறு ஒரு சிக்கலை உண்டாக்கிவிட்டிருக்கிறது. அதாவது, எம்.எஸ்.எம் ஆனந்தனின் பளபளக்கும் பளீர் முகம், இந்த வெயிலின் கொடுமையால் முற்றிலுமாய் கறுத்துப்போய்விட்டது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாலேயே அவர் இந்த நிலைமைக்கு ஆளாகியிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால்,  அதற்குள் ஆனந்தனின் சரும பாதிப்பைக் கிண்டலடிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் மீம்ஸ் பகிரப்பட்டுவருகின்றன.

ஆனந்தனின் முகத்துக்கு என்ன ஆச்சு என அவரிடமே கேட்டோம். "என்னை வெயில் அதிகமாகத் தாக்கிடுச்சுங்க. பவானி, அந்தியூர் பக்கம் எல்லாம் 106 டிகிரி அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்குது. அதனால், தோல் அலர்ஜி ஆகிடுச்சு. வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள முதலில் ஒரு கிரீமை வாங்கிப் பயன்படுத்தினேன். அதில் ஏதாவது தவறு இருந்திருக்கலாம்.  அதனால் அதிகமாகிவிட்டது. தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால், ஓய்வு இல்லாமல் இடைவிடாது பயணித்தோம் என்றவர், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி றப்போகும் தொகுதியாக திருப்பூர் இருக்கும் என்றார் நம்பிக்கையோடு.