வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ரத்து! - பரப்புரை ஓய்ந்த பின்னர் அறிவித்த தேர்தல் ஆணையம் | ec cancel election in vellore constituency

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (16/04/2019)

கடைசி தொடர்பு:07:17 (17/04/2019)

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ரத்து! - பரப்புரை ஓய்ந்த பின்னர் அறிவித்த தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாளான ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், பணம் கைப்பற்றப்பட்ட புகாரில் வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள், கடந்த மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி, வருமான வரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.

காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன. கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால், வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, `வருமான வரித் துறை சோதனைகுறித்து அறிக்கை அளித்துவிட்டதாகவும், தேர்தல் ரத்துகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' என்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், வேலூர் ரெய்டு குறித்து வருமான வரித் துறை, தேர்தல் ஆணையத்துக்கு நேற்று காலை அறிக்கை அளித்திருக்கிறது. அந்த அறிக்கையில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்துசெய்ய வருமான வரித் துறை வலியுறுத்தவில்லை என்று டெல்லியிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், வருமான வரித் துறை அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்துசெய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதனால், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்துசெய்யப்படுமா அல்லது அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இதற்கிடையே, தற்போது வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டாலும் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வேலூர் மக்களைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, காட்பாடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் பணம் வாங்கி பெண்கள் கையில் கொடுக்கிறார். அதைப்பற்றிக் கேட்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு மனம் வராது. தேனியில் 2 ஆயிரம் ரூபாய் வாரி வாரிக் கொடுப்பதை ஊடகங்கள் படம் எடுத்துக் காட்டினர். தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

எங்கள் மீது நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே, முடிவெடுத்திருப்பது திட்டமிட்ட சதி. எங்கள் மீது நடவடிக்கை எடுக்க மோடி அரசு உத்தரவிட்டுள்ளது. பணம் கொடுக்கும் அ.தி.மு.க மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை. புதுவை உட்பட மீதமிருக்கும் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். எங்கள் வழக்கறிஞரிடம் பேசி சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க