`அனைத்துக் கட்சிக் கொடிகளுடன் வித்தியாசமான பிரசாரம்!' - கவனம் ஈர்த்த சேலம் சமூக ஆர்வலர் | salem social activist Tiyagu Thomas's awareness rally over 100 percent voting

வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (16/04/2019)

கடைசி தொடர்பு:21:41 (16/04/2019)

`அனைத்துக் கட்சிக் கொடிகளுடன் வித்தியாசமான பிரசாரம்!' - கவனம் ஈர்த்த சேலம் சமூக ஆர்வலர்

`அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என்று கூறி வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி சேலம் சமூக ஆர்வலர் தியாகு தாமஸ் மேற்கொண்ட பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியா

ஒரு வழியாக மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தமிழகத்தில் ஓய்ந்திருக்கிறது. பலரும் தங்கள் கட்சி வேட்பாளருக்காக இரவு பகல் பாராமல் வாக்குசேகரித்து ஓய்ந்திருக்கிறார்கள். ஆனால், சேலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அனைத்து அரசியல் கட்சிக் கொடிகளோடு தேசியக் கொடியையும் கட்டிக்கொண்டு, வாக்களிப்பதன் அவசியத்தைப் பற்றி தீவிர பிரசாரத்தை மேற்கொண்ட தியாகு தாமஸும் தன்னுடைய இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவுசெய்திருக்கிறார்.

பிரசாரம் குறித்து தியாகு தாமஸை சந்தித்துப் பேசினோம். ``நான் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பாலித்தீன் இல்லாத தேசியக்கொடியை உருவாக்க, பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டிருக்கிறேன். அதையடுத்தே, அரசு பாலித்தீன் இல்லாத தேசியக்கொடியை உருவாக்கியது. அடுத்து, செம்மரக் கடத்தல் பற்றி பல விழிப்புணர்வு பிரசாரங்களும், ஊனமுற்றோருக்கான பல முற்போக்கான நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறேன்.

பிரசாரம்

அதன் தொடர்ச்சியாக, கடந்த வருடம் கிரீன் குளோபல் என்ற அமைப்பை உருவாக்கி, மக்களுக்கான பல விழிப்புணர்வு பிரசாரங்கள், சமூக அவலங்கள், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை மேற்கொண்டுவருகிறோம். எங்கள் அமைப்பில் 25 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அனைவரும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழக்கூடிய மக்கள். நாங்கள் யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுடைய  கைக்காசுகளை செலவுசெய்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறோம்.

அதன் அடிப்படையில், வரும் ஏப்ரல் 18-ம் தேதி, மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும். என்பதற்காக இந்த பிரசார பயணத்தை மேற்கொண்டோம். 'அனைவரும் வாக்களிப்போம். வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என்று தீவிர பிரசாரத்தை மேற்கொண்டோம். அதற்காக என்னுடைய இருசக்கர வாகனத்தில் அனைத்து அரசியல் கட்சிக் கொடிகளோடு, மேலே தேசியக் கொடியையும் கட்டி, காலை முதல் இரவு வரை நானும் என் அமைப்பின் தோழி சுசீலாவும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மக்களை சந்தித்துப் பேசி விழிப்புணர்வு செய்தோம்.

ஒரு நாளைக்கு குறைந்தது 2,500 முதல் 3,000 பேரை சந்தித்துப் பேசினோம். `ஓட்டுப் போடாமல் வீட்டில் இருக்கக் கூடாது. வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது' என்ற தகவலை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறோம். எங்களுடைய பிரசாரத்தை மக்கள் ரசித்துக் கேட்டதோடு, `நிச்சயம் நாங்கள் விரும்பியவருக்கு வாக்களிப்போம். ஓட்டை விற்பனை செய்ய மாட்டோம்' என்ற உறுதிமொழியும் கொடுத்தார்கள்.

அரசியல் கட்சிகளுக்கிடையே கொடி கட்டுவதில் பிரச்னை இருக்கும் சூழ்நிலையில், என்னுடைய வாகனத்தில் அனைத்து அரசியல் கொடிகளும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து, பல அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்தார்கள். எங்களுடைய கணிப்புப்படி சேலம் மக்களவைத் தொகுதியில் 100 விழுக்காடு ஓட்டுப்பதிவு  நடைபெறும் என நம்புகிறோம்'' என்றார்.