`ஆயுதமே வலிதான்; அதிலிருந்து வந்ததுதான் வலிமையும்..!’ - சுசீலா ஆனந்த் | Human rights advocate Suseela Anand speaks about land rights of Adivasis

வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (17/04/2019)

கடைசி தொடர்பு:13:05 (17/04/2019)

`ஆயுதமே வலிதான்; அதிலிருந்து வந்ததுதான் வலிமையும்..!’ - சுசீலா ஆனந்த்

`ஆயுதமே வலிதான்; அதிலிருந்து வந்ததுதான் வலிமையும்..!’ - சுசீலா ஆனந்த்

முந்தைய பாகங்கள்

 ``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா

 ``அன்னிக்குதான் என் உயிர்மேல எவ்வளவு ஆசையிருக்குனு தெரிஞ்சுது!’’ - ரேச்சல் ரெபெக்கா

``தற்கொலைக்குத் துணிஞ்சவளுக்கு, வாழ தைரியம் இருக்காதா?’’ - ரம்யவர்ஷினி

``மண்ணுக்குள்ள இருந்து திரும்பவும் தோண்டி எடுத்த உயிர் இது!’’ - சுனாமி சண்முகவேலின் போராட்டம்

வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை! 

``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... 

இசையரசு - வெளியேற்றப்படும் மக்களுக்கான கலகக்குரல்! 

``எய்ட்ஸால் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள்தான் நான் மருத்துவம் படிக்கக் காரணம்!’’ - ஐஷ்வர்யா ராவ்  

``மனைவியை, படிக்க உற்சாகப்படுத்தி முன்னேறுவதைப் பார்த்து ரசிக்கும் காதலையெல்லாம் சினிமாவுலதானே பார்த்திருப்போம். எனக்கு அப்படியான காதல் கிடைச்சிருந்தது. 12-ம் வகுப்பு முடிச்சு மெப்ஸ் மோட்டார்ஸ் கம்பெனியில 4,000 ரூபாய் வேலைக்குப் போயிட்டிருந்த பாவமான சுசீலா நான்" என்று சொல்லி அவர் சிரித்துக்கொள்ளும்போது, அமைதியான பயந்த சுபாவம்கொண்ட இளவயது சுசீலாவின் எந்தச் சுவடும் அவரிடம் இல்லை. அப்போதும் இப்போதும் அப்படியே இருப்பதாக நம்மால் உணர முடிவது அன்பும், அளவுகடந்த நம்பிக்கையும் மட்டும். 12-ம் வகுப்பு முடிந்து, வீட்டுப் பொருளாதாரத்தைச் சமாளிக்க வேலைக்குச் சென்ற சுசீலா ஆனந்தை வழக்கறிஞராக மாற்றியிருப்பது, காதலும் கம்யூனிஸ்ட் நண்பர்களும்தான்.  

``நானும் பிரதீப்பும் காதலிக்கத் தொடங்கிய பிறகு, அவர் கொடுத்த ஊக்கத்திலும் தோழர்களாலும்தான் சட்டம் படிக்கணும்னு முடிவுபண்ணேன். வீட்டுல என்னோட சின்ன வருமானம்கூட ரொம்ப முக்கியமானது. சம்பாதிக்காம இருந்தாலும் சுமை கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. மதுரையில சட்டம் படிச்ச தோழர்களோட உதவியோடு சாத்தியமாச்சு. சீனியர்களோட புத்தகங்களும் நூலகமும் மட்டும் வச்சு என்னைப் படிக்க வச்சுது கனவு" என்கிறார் வழக்கறிஞர் கனவின் மீதான ஆறா ப்ரியத்துடன். 

சட்டப் படிப்பு முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாகத் திருமணம் செய்துகொண்டனர் சுசீலாவும் பிரதீப்பும். ``ஒரு பிறந்த நாள், ஒரு திருமண நாள். இப்படி ஓர் ஆண்டு மட்டும்தான் பிரதீப்போடு இருக்க முடிஞ்சது” என்று சொல்லும்போது உடைகிறது அவர் குரல். தரமணிப் பகுதியில், ஒருவரது நிலத்தை சட்டவிரோதமாக அபகரிக்க நினைத்த கும்பலை எதிர்த்த காரணத்துக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார் சுசீலாவின் கணவர் பிரதீப். கணவரும் தோழருமான பிரதீப்பின் படுகொலைக்கு அவரே புராசிக்யூட்டராக உதவியாளராக இருந்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

``பிரதீப் கொல்லப்பட்ட பிறகுதான் கடைசி ஆண்டுத் தேர்வு எழுதினேன். தேர்வு காகிதமெல்லாம் போஸ்ட்மார்ட்டம் செய்த அவரோட முகம் தெரியும். ஆனா, அந்த வலிதான், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வெறியாவும் இருந்துச்சு” என்கிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நண்பரும் தோழருமான விஜய் ஆனந்தை மணமுடித்திருக்கிறார் சுசீலா. நந்தன், திலீபன் என இரு மகன்கள்.

அரசு சாரா நிறுவனங்களில் கல்வி உரிமைக்காக, நில உரிமைக்காக, மனித உரிமை சார்ந்த செயல்பாடுகள் என, நிறுவனம் தாண்டிய மக்கள் பணிகளைச் செய்துவரும் சிலரில் சுசீலா, இன்று மிக முக்கியமானவர்.

``நான் வேலை செய்கிற தொண்டு நிறுவனம் மூலமாக வீடு கட்டித் தரும் பணிகள் நடந்துச்சு. பழங்குடிகள், பட்டா இல்லாதவர்களுக்கு வீடுன்னு இந்த வேலைகள் நடக்குது. நிலம் தொடர்பான ஒரு தகராறுலதான் பிரதீப் கொல்லப்பட்டார். நிலம் என்னும் விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு மனையோடு அடங்குற விஷயமில்லை. சரியான அங்கீகாரத்தையும் சமூக மதிப்பையும் அரசும் சமூகமும் தராமப் போகும்போது, எளிய மக்கள்கிட்ட இருந்து பணமுதலைகள் நிலத்தைப் பிடிங்கிடுறாங்க” என்கிறார் சுசீலா. தொலைக்காட்சி விவாதமோ, களமோ அவரது குரல் அறத்துக்காக நிற்கிறது.

``சுசீலாவுக்கு அளவற்ற நம்பிக்கையும் துணிச்சலும் எங்கிருந்து வந்தன?''

``தினமும் நான் சந்திக்கும் பல பெண்களுக்கு இல்லாத துணிச்சலும் நம்பிக்கையுமா? 

நடுக்காட்டில் ஒருநாள் தாத்தா விட்டுவிட்டுச் சென்றபோது, நம்பி ஒருநாள் முழுக்கக் காத்திருந்து வராமல்போகவும், துவண்டுவிடாமல் நான்கு பிள்ளைகளை வளர்த்த அப்பாவழி பாட்டியிடம் இல்லாத நம்பிக்கையா?

கொண்ட கொள்கையை அதிகமாகக் காதலித்த பிரதீப்பிடம் இல்லாத நம்பிக்கையா?

உடைந்து விழுந்த என் மீது என்னைவிட ப்ரியம் காட்டிய என் கணவருக்கு இல்லாத நம்பிக்கையும், அன்புமா எனக்கு இருக்கு. இவர்களிடமிருந்து தேவையான அன்பையும் நம்பிக்கையையும் நான் எடுத்துக்கொண்டேன்'' என்றார்.

சுசீலாவிடமிருந்து நான் கொஞ்சம் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டேன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்