'மக்கள், நோட்டுக்கும் நோட்டாவுக்கும் அடிபணியக் கூடாது...' - தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு! | ki.veeramani Electiom compagain at thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 22:46 (16/04/2019)

கடைசி தொடர்பு:11:31 (17/04/2019)

'மக்கள், நோட்டுக்கும் நோட்டாவுக்கும் அடிபணியக் கூடாது...' - தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு!

மக்கள், நோட்டுக்கும் நோட்டாவிற்கும் அடிபணியக் கூடாது. 'அ.தி.மு.க கூட்டணி, மாட்டுச் சந்தைக் கூட்டணி' என்று தி.க தலைவர் வீரமணி தஞ்சாவூரில் பேசினார்.

வீரமணி

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் பழநிமாணிக்கம், தஞ்சை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரசாரம்  நடைபெற்றது. தி.க தலைவர் கி.வீரமணி, தி.மு.க வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்தார்.முன்னதா,க தி.மு.க வேட்பாளர் பழநிமாணிக்கம் பேசியதாவது: தற்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிசெய்யும் அரசு நமக்கு ஏராளமான தொல்லைகள் தந்துள்ளது. நீட் தேர்வு, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்று எதை எடுத்தாலும் மத்திய, மாநில அரசுகளால் நமக்கு கஷ்டங்கள்தான். இந்தக் கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால், மத்தியில், மாநிலத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்றால், உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் நாம் வெற்றி அடைந்தால்தான் மக்களுக்குத் தேவையான அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க முடியும். பணத்தைக் கொடுத்து உங்களை வாங்கப் பார்ப்பார்கள். அதை நீங்கள் திருப்பி அனுப்பிவிட வேண்டும். ஏனெனில், மீத்தேன், ஹைட்ரோகார்பான் ஆகியவற்றின்மூலம் வந்த பணம் அது. உதயசூரியனுக்கு வாக்களித்து, எங்களை வெற்றிபெறச் செய்தால், உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

தி.க தலைவர் கி.வீரமணி: ''தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணி. மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எதிர் அணியில் இருக்கும் அ.தி.மு.க கூட்டணி மாட்டுச்சந்தை கூட்டணி. இவர்கள் பேரம் பேசிவந்த கூட்டணி. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கே முதன்மையாக அமையும் வகையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் வடிவமைத்துள்ளார். நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வால் மருத்துவபடிப்பைப் படிக்க முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். மற்ற மாநிலங்களைவிட அதிக அளவில் தமிழகத்தில்தான் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. நமது மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள், அதிக அளவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான், கருணாநிதி அதிக அளவிலான மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தினார். 

ஆனால், ஏழை மாணவர்கள் பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க கூட்டணி, நீட் தேர்வு ரத்து என்று சொல்ல முடியுமா... அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? ஏனெனில், அவர்கள் மத்திய அரசிடம் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி பேசும்போது, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்கிறார். நுழைவுத் தேர்வு என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தார். ஜெயலலிதா எதைக் கொண்டு வந்தார் என்று எதையும் தெரியாமல் ஆட்சிசெய்யும் ஒரே முதல்வர் இவர்தான்.

நான் விவசாயி என்று முதல்வர் பேசுகிறார். அவர்தான் விவசாயிகளின் நிலத்தைப் பிடிங்கி,அவர்கள் கண்ணீர் விட்டும் கவலைப்படாமல் 8 வழிச்சாலை கொண்டுவந்தார். அவருக்குத் தேவை எல்லாம் ஒரு புறம் கோடி, மறுபுறம் மோடி. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம்கூட தெரிவிக்காதவர்தான் மோடி. அவர் இன்று தேர்தலுக்காக தமிழகத்தை நாடி வருகிறார். முதல் தலைமுறை இளைஞர்கள் மோடியின் வித்தையில் மயங்கிவிடக் கூடாது. மோடி, கடந்த முறை கூறிய எதையும் செய்யவில்லை. அவர் செய்தது எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, வேலைவாய்ப்பின்மை. மோடி, வளர்ச்சி வளர்ச்சி என்று பேசுகிறார். ஆனால், எல்லாம் தளர்ச்சி தளர்ச்சிதான். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும். சர்வாதிகாரம் கட்டவிழ்த்து விடப்படும். உங்களை அவர்களுக்கு விற்றுவிடாதீர்கள். மோடியையும் பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது. தோல்வி பயத்தால் அவர்கள் எதையும் செய்வார்கள்.
நாம், நோட்டுக்கும் நோட்டாவுக்கும் அடிபணியாமல், அதையும் தாண்டி உதயசூரியனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். உதயசூரியன் வானத்தில் எரிந்தால்தான். உங்கள் வீடுகளில் விளக்கு எரியும். எனவே, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், பழநிமாணிக்கம், நீலமேகம் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க