`போலீஸ்... போலீஸ்.. என சத்தம் போட்டும் யாரும் உதவ வரல' - கடத்தல்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளான காவலர்! | police constable attacked by smuggling groups in nagai

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/04/2019)

கடைசி தொடர்பு:07:08 (17/04/2019)

`போலீஸ்... போலீஸ்.. என சத்தம் போட்டும் யாரும் உதவ வரல' - கடத்தல்காரர்கள் தாக்குதலுக்கு உள்ளான காவலர்!

கள்ளச்சாராயம் கடத்தி வந்தவர்களுக்கும், தனிப்படை போலீஸாருக்கும் நள்ளிரவில் நடந்த மோதலில், சுபாஷ் என்ற காவலர் படுகாயமுற்று சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலீஸ் சுபாஷ்

ஏப்ரல் 18 -ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று முதல் மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கடந்த 2  தினங்களாகவே காரைக்காலிலிருந்து பெரியளவில் மது கடத்தப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க  எஸ்.பி தலைமையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மயிலாடுதுறை அருகே பேச்சாவடி என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் 2 மூட்டை மது பாட்டில்களுடன் வந்தவர்களை,  தனிப் படையைச் சேர்ந்த ஏட்டு கோபி, காவலர் சுபாஷ் இருவரும் பிடித்தனர்.

 அதன்பின் நடந்தவற்றை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் சுபாஷ் நம்மிடம் விளக்கினார். ``மது கடத்தி வருவதாக எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி நானும் ஏட்டு கோபியும் நள்ளிரவில் காத்திருந்தோம். அப்போது பேச்சாவடியைச்  சேர்ந்த சாராய வியாபாரி ராஜூவின் மகன் பாபு என்பவனும், இன்னொருவனும், 2 மூட்டை மது பாட்டில்களோடு வந்தபோது மடக்கிப் பிடித்தோம். திடீரென  ஒருவன் தப்பித்துச் சென்று, அவனது கூட்டாளிகள் 10 நபர்களை அழைத்து  வந்து எங்களைத்  தள்ளிவிட்டு ஒரு மது மூட்டையைப் பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றனர். அவர்களைப்  பின் தொடர்ந்து, நான் விரட்டிச் சென்றபோது பட்டமங்கலம் ஆராய தெரு அருகே என்னைப் பலரும்  சூழ்ந்துகொண்டு, எனது அடையாள அட்டை மற்றும் செல்போனை பிடிங்கிக்கொண்டு இரும்புக் கம்பிகளால் தாக்கினர். நான் 'போலீஸ் ...போலீஸ்'.. என்று சத்தம் போட்டும் யாரும் உதவிக்கு வரலை. அவர்களிடமிருந்து ரத்தம் சொட்ட சொட்ட தப்பித்து, தெரிந்த ஒருவர் மூலம் மருத்துவமனை சிகிச்சையில் வந்து சேர்ந்துவிட்டேன். ஒரு மூட்டை மதுவுடன் பாலு சிக்கியிருக்கிறான்" என்றார்.

தேர்தல் பரபரப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, டாஸ்மாக் இல்லாத 3 நாளில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற இதுபோன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.