`அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு; துப்பாக்கிச் சூடு!' - ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலக களேபரம் | Police arrests 4 members from andipatti AMMK party office over money distributing to voters

வெளியிடப்பட்ட நேரம்: 22:53 (16/04/2019)

கடைசி தொடர்பு:07:14 (17/04/2019)

`அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு; துப்பாக்கிச் சூடு!' - ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலக களேபரம்

தேனி அ.ம.மு.க அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து அக்கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், பாதுகாப்புக்காக போலீஸார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆண்டிபட்டி அ.ம்.மு.க அலுவலகம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதனால், இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டனர். பரப்புரை ஓய்ந்தபின்னர் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை என பரபரப்பாகியிருக்கிறது தமிழக அரசியல் களம். 

இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மக்களவைத் தேர்தலுடன் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆண்டிபட்டி பேருந்துநிலையம் அருகில் தனியார் காம்ப்ளெக்ஸில் செயல்பட்டு வரும்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தற்காலிக கட்சி அலுவலகத்திலிருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேனி கலெக்டர் அலுவலகத்துக்குப் புகார் போயிருக்கிறது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் சோதனையிட முயன்ற பறக்கும்படை அதிகாரிகள், அ.ம.மு.க நிர்வாகிகளை உள்ளே வைத்து அலுவலகத்தைப் பூட்டியிருக்கின்றனர். சப் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் போலீஸார் மற்ற அதிகாரிகளின் வருகைக்காகக் காத்திருந்தபோது, அலுவலகத்துக்கு உள்ளே இருந்த அ.ம.மு.க-வினர் தங்கள் கட்சியினருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, அந்த அலுவலகத்தில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளிருந்து பணத்தை அ.ம.மு.க-வினர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில், அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகம்

அ.ம.மு.க-வினர் பணத்தை எடுத்துச் செல்வதை அறிந்த போலீஸார், அங்கு சென்று அவர்களைத் தடுக்க முயன்றிருக்கின்றனர். அப்போது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இந்த களேபரத்தில் அ.ம.மு.க-வினர் சிலர் தப்பியிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலரைக் காப்பாற்றுவதற்காக போலீஸார் மேல்நோக்கி துப்பாக்கியால் 4 முறை சுட்டிருக்கிறார்கள். அதன்பின்னர், அ.ம.மு.க தேனி மாவட்டத் துணைச் செயலாளர் பங்கஜம் பழனி உள்ளிட்ட  4 பேரைக் கைது செய்ததுடன், பணத்தையும் கைப்பற்றியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் பயன்படுத்திய காரையும் அதிலிருந்த பணத்தையும்  போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட பகுதியில் துணை ராணுவப் படையினர் மற்றும்  போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.