``முதல்முறையாக  ஓட்டு போடப் போகிறேன்!” -கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 85 வயது முதியவரின் மகிழ்ச்சி | Old man was happy to vote for the first time in his life

வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (17/04/2019)

கடைசி தொடர்பு:08:04 (17/04/2019)

``முதல்முறையாக  ஓட்டு போடப் போகிறேன்!” -கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 85 வயது முதியவரின் மகிழ்ச்சி

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு முதல் முறையாக வாக்களிக்க உள்ள 85 வயது முதியவர் கண்ணியப்பன் வசிக்கும் வீட்டுக்கு நேரில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதன் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

முதியவர் கண்ணியப்பன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராம இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர், கூலித் தொழிலாளி கண்ணியப்பன் (வயது 85). இவரின் மனைவி கண்ணியம்மாள் 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது, கண்ணியப்பனுடன் அவரின் ஒரே மகள் கருப்பாயி (வயது 55) வசித்து வருகிறார். கருப்பாயிக்கு மூன்று மகன்கள், மூத்த மகன் பாபு, இரண்டாவது மகன் பிரபு, மூன்றாவது மகன் ஏழுமலை. இவர்களில் மூத்த மகன் பாபு திருமணம் ஆகி, மனைவி காமாட்சி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் பிரபுவுக்கும் திருமணம் ஆகி மனைவி ராதிகா மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த மூன்று குடும்பமும் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் 13 வருடங்களுக்கும் மேலாகக் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் வேலை செய்து வந்துள்ளார்கள். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவரும் மருதாடு கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
 
மேற்கண்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த கண்ணியப்பன், கருப்பாயி, பாபு, காமாட்சி, பிரபு, ராதிகா, ராஜேந்திரன் ஆகிய 7 நபர்களும் இதுவரை வாழ்நாளில் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களித்தது இல்லை. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடி நடவடிக்கை எடுத்ததின் மூலம் அந்த 7 பேரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இதன் மூலம் தங்கள் வாழ்கையில் கண்ணியப்பன் மற்றும அவரது குடும்பத்தினர் முதல் முறையாக நாளை (18-ம் தேதி) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள்.
 
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்  நேற்று, கண்ணியப்பன் வீட்டுக்கு நேரில் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பதைச் செயல்விளக்கம் அளித்தார். மேலும், மருதாடு கிராம இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 23 குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் இயந்திரம் குறித்தும் செயல்விளக்கம் அளித்தார்.

விளக்கும் மாவட்ட ஆட்சியர் 

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ``வந்தவாசி பகுதியில் மருதாடு கிராமத்தில் வசித்து வரும் 85 வயது முதியவர் கண்ணியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டார்கள். தற்போது இவர்கள் முதல் முறையாக ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பதற்கு வாக்காளர் பட்டியலில் வந்தவாசி வட்டத்தில் 7 நபர்களும், போளுர் வட்டத்தில் 10 நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்" இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை வாக்களித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கண்ணியப்பன் கூறுகையில், ``85 வயதில் முதல் முறையாக ஓட்டு போடப் போகிறேன். என்னுடன் என் குடும்பமும் ஓட்டு போட உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டு போட ஏற்பாடுகள் செய்துகொடுத்த கலெக்டருக்கு நன்றி” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க